ஊருக்கு சென்ற பணியாளர்கள் பாதியில் நிற்குது பாலம் பணிகள்
ஊருக்கு சென்ற பணியாளர்கள் பாதியில் நிற்குது பாலம் பணிகள்
ADDED : ஜூலை 30, 2026 07:03 PM
மேட்டுப்பாளையம்: ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு பணியாளர்கள் சென்றதால், நடூர் பாலம் கட்டும் பணிகள், நடைபெறாமல் உள்ளன.
மேட்டுப்பாளையம் -–- அவிநாசி இடையே உள்ள, 38 கி.மீ.,க்கு இரு வழி சாலையாக இருப்பதை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தமிழக அரசு, 115 கோடி ஒதுக்கீடு செய்தது. இரு ஆண்டுகளில் அவிநாசியில் இருந்து அன்னுார் வரை, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை உள்ள இருவழி சாலை, நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகளில், தேவையான இடங்களில் புதிதாக பாலங்கள் கட்டுவது, விரிவாக்கம் செய்வது போன்ற பணிகள் நடக்கின்றன. மேட்டுப்பாளையம் நடூரிலும், அன்னுார் சாலையில் அரசு கலைக்கல்லுாரி செல்லும் பிரிவு அருகேயும், புதிய பாலம் கட்டும் பணிகள், இரு வாரங்களாக நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் குறிப்பிட்ட காலத்தில், நான்கு வழி சாலை விரிவாக்கம் செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நெடுஞ்சாலை துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘பாலம் கட்டும் பணிகளில் ஈடுபட்டவர்கள், மதுரை, தேனி, கம்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். சொந்த ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு இவர்கள் சென்றதால், ஒரு வாரமாக பணிகள் நடைபெறவில்லை. சில நாட்களில் அவர்கள் திரும்பி வந்தவுடன், பாலம் கட்டுமான பணிகள் விரைவாக நடக்கும்,’’ என்றார்.
