/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் அணையை எந்த தொழில்நுட்பத்தில் துார்வாருவது?
/
பில்லுார் அணையை எந்த தொழில்நுட்பத்தில் துார்வாருவது?
பில்லுார் அணையை எந்த தொழில்நுட்பத்தில் துார்வாருவது?
பில்லுார் அணையை எந்த தொழில்நுட்பத்தில் துார்வாருவது?
ADDED : மே 12, 2024 04:56 AM

கோவை பில்லுார் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை, எந்த தொழில்நுட்பத்தில் துார்வாருவது; வண்டல் மண்ணை எவ்வாறு வெளியேற்றுவது என்பது தொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நாளை (13ம் தேதி) நடக்கும் சிறப்பு கூட்டத்தில், இறுதி முடிவெடுக்கப்படுகிறது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு, மிக முக்கிய நீராதாரமாக பில்லுார் அணை உள்ளது. இதன் மொத்த உயரம், 100 அடி. இந்த அணை, 1967ல் கட்டப்பட்டது.
அதன் பின் ஒருமுறை கூட துார்வாராததால், 45 அடி உயரத்துக்கு வண்டல் மண் படிந்திருக்கிறது. இதன் காரணமாக, பருவ மழை காலங்களில் போதுமான தண்ணீர் தேக்க முடியாமல் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, பில்லுார் அணைக்கு சென்று, நீர் இருப்பு விபரங்களை பார்வையிட்டார். என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவ குரு பிரபாகரன் ஆகியோர் விளக்கினர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''பில்லுார் அணையை துார்வாருவதில், தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. 25 ஆயிரம் கியூபிக் மீட்டர் வண்டல் மண் படிந்திருக்கிறது. 14 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவதால், எவ்வளவு வண்டல் மண் எடுக்க முடியும்; எந்த வகையில் துார்வாருவது என்பதை முடிவெடுக்க வேண்டும்,'' என்றார்.
கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
'பைலட்' திட்டத்தில், 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் வண்டல் மண் ஏற்கனவே துார்வாரப்பட்டிருக்கிறது.
உலக வங்கி நிதியுதவியுடன், 'டிரெஜிங்' முறையில், 25 ஆயிரம் கியூபிக் மீட்டர் வண்டல் மண் எடுக்க வேண்டும்; இதற்கு தண்ணீர் அதிக தேவை. தண்ணீர் வந்த பிறகே, இந்நடைமுறையில் துார்வார முடியும். வரும் திங்கட்கிழமை (நாளை) பில்லுார் அணை துார்வாருவது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
மின்வாரியம், குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். வண்டல் மண் அதிகமாக படிந்திருக்கிறது; ஏதாவதொரு 'டெக்னாலஜி'யில் கேட் மூலமாக வெளியேற்ற வேண்டும்.
எந்த 'டெக்னாலஜி'யை பின்பற்றுவது, வண்டல் மண்ணைவெளியே எடுத்ததும் என்ன செய்வது என்பது தொடர்பாக, இறுதி முடிவெடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.