ADDED : ஜூன் 17, 2024 12:52 AM

தண்ணீரின்றி தவிப்பு
பீளமேடு, நேரு நகர், இரண்டாவது வீதியில், குழாயில் உப்பு தண்ணீர் சரியாக வருவதில்லை. மிகவும் குறைவாகவே தண்ணீர் வருவதால், போதிய தண்ணீர் கிடைக்காமல் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். அருகிலுள்ள தெருக்களுக்கு சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய சூழல் உள்ளது.
- கோபால கிருஷ்ணன், பீளமேடு.
புத்தகங்களை சுற்றி புதர்
போத்தனுார் கிளைநுாலக வளாகம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. நுாலகத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு, புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், கொசு, பூச்சி தொல்லைகள் அதிகமாக உள்ளது. பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் நுாலகத்திற்குள் படையெடுக்கின்றன.
- தங்கவேல், போத்தனுார்.
போக்குவரத்திற்கு இடையூறு
செட்டிபாளையம் ரோடு, ஜி.டி., டேங்க் பகுதியில், கடைகளுக்கு வருவோர், தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டியதுடன், வாகனஓட்டிகளும் பாதிப்படைகின்றனர்.
- பத்ரி, செட்டிபாளையம்.
திறந்தவெளியில் குவியும் குப்பை
கோவை மாநகராட்சி, 18வது வார்டு, வெங்கடசாமி வீதி, ரெயில்வே மென்ஸ் காலனி பகுதியில், சாலையோரம் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. குப்பையை அகற்றி, இப்பகுதியில் தொட்டி வைக்க வேண்டும். சீரான இடைவெளியில், குப்பையை அகற்ற வேண்டும்.
- பத்மநாபன், வெங்கடசாமி வீதி.
கடும் துர்நாற்றம்
குனியமுத்துார், நரசிம்மபுரம், ஐயப்பா நகர், எட்டாவது வீதியில், சாக்கடையில் அதிகளவு மண் நிரம்பியுள்ளது. இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் நிரம்பி, சாலையில் வழிகிறது. பல இடங்களில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- தங்கமுத்து, குனியமுத்துார்.
ஆபத்தான குழி
பீளமேடுபுதுார் - திருமகள் நகர் சந்திப்பில், 52வது வார்டில், சாக்கடை கால்வாய் சுவர் இடிந்து குழியாக உள்ளது. இரவு நேரங்களில், பைக்கில் செல்வோரும், நடந்து செல்பவர்களும் விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். கவுன்சிலர், கிழக்கு மண்டல தலைவரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- யுவராஜ்,
திருமகள் நகர்.
தாமதமாகும் பணியால் சிரமம்
அஜ்ஜனுார் - வேடப்பட்டி ரோட்டில் விரிவாக்க பணிக்காக கடந்த மாதம், சாலையோரம் குழி தோண்டி, ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டது. அதற்குபின், பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. பேருந்துகள், பள்ளி வாகனங்கள் போன்றவை செல்லும் போது, எதிர்புறம் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும்.
- சுரேஷ், வடவள்ளி.
குப்பை தேக்கம்
ராமநாதபுரம், முனுசாமி நகரில், சாலையோரம் காய்ந்த இலைகள், குப்பைகள் அதிகளவு குவிந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் குடியிருப்புக்குள் வருகின்றன. குப்பை தேக்கத்தால், சுகாதாரமற்ற சூழலும் நிலவுகிறது.
- வேல்ராஜ், முனுசாமி நகர்.
இருளால் பாதுகாப்பில்லை
மதுக்கரை மார்க்கெட், ஸ்ரீ லட்சுமி நகரில், சுமார் ஒரு வாரமாக தெருவிளக்கு எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில் மக்கள் வெளியேறவே அஞ்சுகின்றனர். பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் விரைந்து தெருவிளக்கை சரிசெய்துதர வெண்டும்.
- ஜெயம், மதுக்கரை.
சாலையில் பெரிய பள்ளங்கள்
ஆர்.எஸ்., புரம், டி.வி.,சாமி ரோடு மற்றும் தடாகம் ரோடு சந்திப்பில், சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. பைக்கில் செல்வோர், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
- பரமேஸ்வரன், ஆர்.எஸ்.,புரம்.