/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.டி.ஓ., ஆபீஸ் அருகில் இருந்தும் லைசென்ஸ் எடுக்க முடியவில்லை: 16 கி.மீ., தூரம் சுற்றும் அவலம்
/
ஆர்.டி.ஓ., ஆபீஸ் அருகில் இருந்தும் லைசென்ஸ் எடுக்க முடியவில்லை: 16 கி.மீ., தூரம் சுற்றும் அவலம்
ஆர்.டி.ஓ., ஆபீஸ் அருகில் இருந்தும் லைசென்ஸ் எடுக்க முடியவில்லை: 16 கி.மீ., தூரம் சுற்றும் அவலம்
ஆர்.டி.ஓ., ஆபீஸ் அருகில் இருந்தும் லைசென்ஸ் எடுக்க முடியவில்லை: 16 கி.மீ., தூரம் சுற்றும் அவலம்
ADDED : மே 02, 2024 10:59 PM
பெ.நா.பாளையம்:கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் துடியலூரில் இருந்தும், லைசென்ஸ் பெற, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள், 16 கி.மீ., தூரம் உள்ள மேட்டுப்பாளையம் செல்ல வேண்டி உள்ளது.
கோவை வடக்கு, தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், கோவை பாலசுந்தரம் ரோட்டில் செயல்பட்டு வந்தன. நிர்வாக வசதிக்காக கோவை மத்திய ஆர்.டி.ஓ., அலுவலகம் துவக்கப்பட்ட பின்பு, வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் துடியலூருக்கும், தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் பீளமேடுக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டன. இதன்படி துடியலூரில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கடந்த, 2008 டிச., 15ம் தேதி திறக்கப்பட்டது.
இதில், பீளமேடு தண்ணீர் பந்தல், ஆவராம்பாளையம், அத்திப்பாளையம், ஆட்டோ காலனி, வீரகேரளம், வெள்ளமடை, சாய்பாபா காலனி, ஜி.சி.டி., கோல்ட்வின்ஸ், அனுப்பர்பாளையம், ஜோதிபுரம், மத்தம்பாளையம், உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டன.
இந்நிலையில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., நிர்வாகத்தில் இருந்த பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம், வீரபாண்டி, பிளிச்சி, வடக்கு, தெற்கு, கூடலூர் வடக்கு, தெற்கு, நாயக்கன்பாளையம் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த உத்தரவு கடந்த, 2010 ஜன., 1 முதல் அமலுக்கு வந்தது.
இந்த உத்தரவுக்கு பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அப்போதே கடும் அதிருப்தி தெரிவித்தனர்.இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான லைசன்ஸ் பெற, பெரிநாயக்கன்பாளையத்துக்கு வெகு அருகில் உள்ள துடியலூருக்கு செல்லாமல், 16 கி.மீ., தொலைவில் உள்ள மேட்டுப்பாளையம் செல்ல வேண்டியுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், பலன் இல்லை.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,
'கடந்த, 14 ஆண்டுகளாக லைசென்ஸ், முகவரி மாற்றம், புதுப்பித்தல், புதிய லைசென்ஸ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பெரியநாயக்கன்பாளையத்தில் வசிப்பவர்கள் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டி உள்ளது. மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
துடியலூரில் உள்ள கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதில்லை. எனவே பெரியநாயக்கன்பாளையம், கூடலூர், மத்தம்பாளையம், நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்துடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.