/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகரிக்கும் வாகனங்களால் நகர் முழுவதும் கார்பன் புகை!
/
அதிகரிக்கும் வாகனங்களால் நகர் முழுவதும் கார்பன் புகை!
அதிகரிக்கும் வாகனங்களால் நகர் முழுவதும் கார்பன் புகை!
அதிகரிக்கும் வாகனங்களால் நகர் முழுவதும் கார்பன் புகை!
UPDATED : செப் 02, 2024 10:30 AM
ADDED : செப் 02, 2024 01:20 AM

கோவை:அதிகரிக்கும் வாகனப்போக்குவரத்தால், சுற்றுசூழல் மாசு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஒரு நாள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த முன்வர வேண்டுமென, சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இரண்டாம் நிலை நகரமான கோவை, அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. நகரின் வளர்ச்சி காரணமாக, மாநகராட்சியாக வரையறுக்கப்பட்டுள்ள 254 சதுர கி.மீ., பரப்பளவைத் தாண்டி, சுற்றிலும் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துப் பகுதிகள், கோவையுடன் பின்னிப்பிணையும் அளவுக்கு, புதிய குடியிருப்புகளும், வணிகப்பகுதிகளும் பெருகியுள்ளன.
அரசு, தனியார் பஸ்களை தவிர, புதிதாக உருவாகியுள்ள பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பல லட்சம் மக்களும், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் மற்றும் சொந்த வாகனங்களையே நம்பியுள்ளனர்.
கோவையில் நாளுக்கு நாள், வாகன பெருக்கம் அதிகரித்து வருவதால், எந்த சாலையில் சென்றாலும், நெருக்கடியில் சிக்கி, ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. வாகனங்களில் பயணிப்போர் படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
சமீபத்தில், போக்குவரத்து போலீசார் எடுத்த ஆய்வில், 26 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுவதும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்கள் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டது.
வெளியூர், வெளிமாநில வாகனங்களின் கணக்கு தனி. இந்த வாகனங்கள் அத்தனையும், உமிழும் கார்பன் அளவு அதிகம். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
கார்பன் அளவை குறைக்க பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில், ஒவ்வொரு துறையினரும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.
கோவையில் அதிகளவு அரசு, தனியார் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளுக்கு சென்று வரும் பல ஆயிரம் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலும் பைக், கார்களை பயன்படுத்துவது சகஜமாகி விட்டது.
இப்படி தினமும் பல ஆயிரம் வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் அளவை குறைக்க, குறிப்பிட்ட ஒரு நாள் கல்லுாரிகள், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தலாம்.
மற்றொரு நாள், பள்ளி ஆசிரியர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தலாம். மற்றொரு நாள் தொழில் நிறுவனத்தினர், இன்னுமொரு நாள் தனியார் நிறுவனத்தினர், என இப்படி வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையினரும் பின்பற்றினால் கார்பன் அளவு குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கும்.
முயன்றால் முடியாது ஏதுமில்லை. சூழல் பாதுகாப்பில் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் கோவை, இந்த விஷயத்திலும் தனது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த, கோவை கலெக்டர் முதலில் முன்வர வேண்டும்.