/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமீறி வலி நிவாரண மாத்திரை விற்பனை 20 மருந்துக்கடைகள் மீது வழக்குப்பதிவு
/
விதிமீறி வலி நிவாரண மாத்திரை விற்பனை 20 மருந்துக்கடைகள் மீது வழக்குப்பதிவு
விதிமீறி வலி நிவாரண மாத்திரை விற்பனை 20 மருந்துக்கடைகள் மீது வழக்குப்பதிவு
விதிமீறி வலி நிவாரண மாத்திரை விற்பனை 20 மருந்துக்கடைகள் மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 02, 2024 10:32 PM
பொள்ளாச்சி,:கோவை மண்டலத்தில், டாக்டர் பரிந்துரை சீட்டின்றி வலி நிவாரண மாத்திரை விற்றதாக, கடந்த ஆறு மாதங்களில், 20 மருந்துக்கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞர்கள் பலர் போதைக்காக பயன்படுத்துகின்றனர். இதையடுத்து, வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனையை ஒழுங்குபடுத்த, மருத்து கட்டுப்பாட்டு துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மண்டலத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 3,860 மருந்துக்கடைகளில், மருந்தக ஆய்வாளர்கள், அவ்வபோது ஆய்வு மேற்கொண்டும் வருகின்றனர்.
அப்போது, டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமலும், 'பில்' இன்றியும் வலி மாத்திரைகள் விற்றதாக, வழக்கு மற்றும் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜன., முதல் ஜூன் மாதம் வரை, கோவை மாவட்டத்தில், 10 கடைகள் மீது வழக்குப்பதிவு, 8 கடைகளில் மருந்து விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் 3 மருந்துக்கடைகள் மீது வழக்கு, ஒரு கடைக்கு விற்பனையில் தற்காலிக தடையும்; திருப்பூர் மாவட்டத்தில், 7 கடைகள் மீது வழக்கு, 3 கடைகளுக்கு விற்பனையில் தற்காலிக தடையும், ஒரு மருந்துக் கடைக்கு உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் குருபாரதி கூறியதாவது:
மருந்துக் கடைகளில், டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி, வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது. டாக்டர் பரிந்துரை சீட்டுடன் வலி நிவாரணி விற்பனை செய்தாலும், அதற்கான 'பில்' பராமரிப்பு அவசியம்.
அதன்படி, மருந்துக் கடைகளில் விதிமீறி வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் மருந்து கடைகள் மீது, வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சிலர், ஆன்லைன் மார்க்கமாக இத்தகைய மாத்திரைகளை வாங்குகின்றனர். இத்தகைய விற்பனை தடுக்க, மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.