/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல்லையில் தணிக்கையை தீவிரப்படுத்தணும்! தமிழக, கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை
/
எல்லையில் தணிக்கையை தீவிரப்படுத்தணும்! தமிழக, கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை
எல்லையில் தணிக்கையை தீவிரப்படுத்தணும்! தமிழக, கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை
எல்லையில் தணிக்கையை தீவிரப்படுத்தணும்! தமிழக, கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை
ADDED : மார் 22, 2024 01:10 AM

- நமது நிருபர் -
தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையாக, கோவை மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த, இரு மாநில அதிகாரிகள் ஆலோசித்தனர்.
கோவை மாவட்டத்தின் இரு எல்லைப்பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லைகளாக அமைகின்றன.
அதில், பொள்ளாச்சி நடுப்புணி, வடக்குகாடு, ஜமீன்காளியாபுரம், கோபாலபுரம், வேலந்தாவளம், வீரப்பகவுண்டனுார், வாளையார், மீனாட்சிபுரம், செம்மணாம்பதி உட்பட்ட, 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன.
சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
தேர்தல் நடத்தும் அதிகாரிகளான, கோவை கலெக்டர் கிராந்திகுமார், பாலக்காடு கலெக்டர் சித்ரா, திருச்சூர் கலெக்டர் கிருஷ்ணன் தேஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழகம் - கேரள மாநில எல்லையாக உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்களை, தணிக்கை மேற்கொண்டு பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்; பதற்றமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதற்றமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.
மதுபானங்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். வெளிநாட்டு மதுவகைகள் இரு மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதை கண்காணிக்க, வாகன சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை எஸ்.பி., பத்ரி நாராயணன், டி.ஆர்.ஓ., ஷர்மிளா, மாவட்ட வன அலுவலர்கள் ஜெயராஜ், பிரவீன் (நெம்மாறா), ஜோசப் தாமஸ் (பாலக்காடு), போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., அப்துல் முநியூர் (பாலக்காடு), பிரதீப் என்.வெயில்ஸ் (திருச்சூர்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, தாசில்தார் தணிக்கைவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

