/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றம் ஒன்றே மாறாதது; உணர்ந்தனர் விவசாயிகள்
/
மாற்றம் ஒன்றே மாறாதது; உணர்ந்தனர் விவசாயிகள்
ADDED : ஏப் 03, 2024 10:58 PM
கோவை, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் தென்னை விவசாயம் பரவலாக இருந்த நிலைமாறி, தற்போது, தஞ்சை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என, 37 மாவட்டங்களில் தென்னை சாகுபடி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தேங்காய் விலை உயரவில்லை. மாறாக, சீசன் காலம் மட்டுமின்றி, சீசன் இல்லாத காலத்திலும், விலை சரிவு ஏற்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் விற்ற விலையே தற்போது கிடைக்கிறது, என, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
பட்ஜெட்டில் துவங்கி, தேர்தல் அறிக்கை வரையிலும் தென்னை விவசாயிகளை கவரும் வகையில், அறிவிப்புகள் இடம் பெறுகின்றன. ஆனால், காகித அறிவிப்பாகவே இருப்பதால், ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் தென்னை விவசாயிகள்.
இந்நிலையில், தென்னை விவசாயிகள் முன்வைக்கும் கருத்துக்கள் இதோ...
l பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரிய தலைமை அலுவலகம் அமைக்க வேண்டும். திட்டங்கள் விவசாயிகளை சென்றடைய வேண்டும்.
l தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் குழுவை ஏற்படுத்த வேண்டும்.
l வாடல் நோய் பாதித்த தென்னை மரங்களுக்கு ஏற்ப, விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். தென்னங்கன்று, இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.
l மாநில அரசு வாடல் நோய் பாதித்த மரங்களை கணக்கெடுத்து, ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஒருசிலருக்கு மட்டும் நிவாரண தொகை வழங்கியுள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
l ஆதார விலை திட்டத்தில் கொள்முதல் செய்யும் கொப்பரையை, வெளிமார்க்கெட்டில் விலை சரிவு ஏற்படும் போது, விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். மாறாக, கொப்பரையில் எண்ணெய் உற்பத்தி செய்து, 'பாரத் ஆயில்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
l தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்து, எண்ணெய் உற்பத்தி செய்து, ரேஷன் கடை, சத்துணவுத்திட்டத்தில் பாமாயிலுக்கு பதிலாக பயன்படுத்த வேண்டும்.
l தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடையை அரசே நடத்தும் நிலையில், தென்னை, பனை மரத்தில் கள் இறக்கவும், தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கவும் அனுமதிக்க வேண்டும்.
l நாடு முழுவதும் இளநீரை விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில், பொள்ளாச்சியில் சந்தை வாய்ப்புகள், குளிர்சாதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
l இந்த தேர்தலில், இதற்கெல்லாம் யார் உத்தரவாதம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே தென்னை விவசாயிகள் ஆதரவு. வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த விவசாயிகள், இந்த தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வருகின்றனர்.

