/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலமலை அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்டம்
/
பாலமலை அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்டம்
ADDED : ஏப் 23, 2024 02:33 AM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் இன்று மாலை, 5.00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
ராமானுஜர் வருகை தந்த திருத்தலம் என பெயர் பெற்ற பாலமலை அரங்கநாதர் கோவில் பெரிய நாயக்கன்பாளையத்திலிருந்து மேற்கே சுமார், 10 கி.மீ., தொலைவில் மலை மீது உள்ளது. தும்பிக்கையாழ்வார், காளிதாசர், ராமானுஜர், அனுமன், தன்வந்திரி உள்ளிட்ட சன்னதிகளுடன் பாலமலை அரங்கநாதர் தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அன்னவாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில் அரங்கநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
21ம் தேதி செங்கோதை அம்மன் அழைப்பும், நேற்று திருக்கல்யாண உற்சவம் புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை, 3:30 மணிக்கு யானை வாகன உற்சவமும், தொடர்ந்து, சின்னதேர் உற்சவமும் நடக்கிறது. மாலை, 5.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை, 24ம் தேதி பரி வேட்டை, குதிரை வாகன உற்சவம், 25ம் தேதி சேஷ வாகன உற்சவம், தெப்போற்சவம் நடக்கிறது. 26ம் தேதி சந்தன சேவை, சாற்றுமுறை நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகள், பாலமலை அரங்கநாதர் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.

