ADDED : ஆக 06, 2024 11:44 PM
அன்னுார் : கரியாம்பாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில், உரிமைத்தொகை கோரி, 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
தமிழக அரசு சார்பில், அனைத்து ஊராட்சிகளிலும் 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடக்கிறது. இம்முகாமில், 15 துறைகளை சேர்ந்த 44 சேவைகள் வழங்கப்படுகின்றன. முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
அன்னூர் தாலுகாவில், நான்காவது முகாம் நேற்று கரியாம்பாளையம் செல்வநாயகி மண்டபத்தில் நடந்தது. கரியாம்பாளையம், காரேகவுண்டன்பாளையம், பிள்ளையப்பம்பாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். இதில் மகளிர் உரிமைத்தொகை கோரி, 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
இத்துடன் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், முதியோர் உதவித்தொகை பெறுதல், புதிய ரேஷன் கார்டு ஆகியவற்றுக்கும் மனு அளித்தனர்.
தொட்டியனூர் பொதுமக்கள் அளித்த மனுவில், 'தொட்டியனூரில் உள்ள மூன்று குட்டைகளில் மண் எடுக்க வருவாய்த்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த குட்டைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே மண் எடுக்க அனுமதிக்க கூடாது. மண் எடுத்தால் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த மரங்கள் அழியும் அபாயம் உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
முகாமில் வேளாண் உதவி இயக்குனர் பிந்து, 'தாட்கோ' மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், கால்நடை பராமரிப்பு துறை டாக்டர் கனகராஜ் பேசினர்.
கூடுதல் கலெக்டர் சுவேதா சுமன், தாசில்தார் குமரி ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கரி,அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.