/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறந்த மாநகராட்சிகளுக்கு முதல்வர் விருது ஆக., 2க்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
/
சிறந்த மாநகராட்சிகளுக்கு முதல்வர் விருது ஆக., 2க்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
சிறந்த மாநகராட்சிகளுக்கு முதல்வர் விருது ஆக., 2க்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
சிறந்த மாநகராட்சிகளுக்கு முதல்வர் விருது ஆக., 2க்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
ADDED : ஜூலை 31, 2024 01:22 AM
கோவை;தமிழகத்தில் உள்ள சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் விருது வழங்க, மாநகராட்சி கமிஷனர்களின் குழுவினர் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுதந்திர தின நிகழ்ச்சியின் போது, முதல்வர் விருது வழங்கப்படுகிறது. முதலிடம் பெறும் சிறந்த மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம், இரண்டாமிடம் பெறும் மாநகராட்சிக்கு ரூ.30 லட்சம், முதலிடம் பெறும் நகராட்சிக்கு, ரூ.30 லட்சம், இரண்டாமிடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், மூன்றாமிடம் பெறும் நகராட்சிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.
இவ்விருதுக்கு மதிப்பெண் அடிப்படையில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்படுகின்றன. 2024-25ம் ஆண்டுக்கான விருது வழங்க, ஏற்கனவே பெற்ற புள்ளிவிபரங்கள் அடிப்படையில், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, துாத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள், திருவண்ணாமலை, காரைக்குடி, திருவாரூர், ராணிப்பேட்டை, ஜோலார்பேட்டை, மறைமலை நகர், காங்கயம், சிதம்பரம், அம்பாசமுத்திரம், ஆம்பூர் ஆகிய, 10 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஆக., 1 வரை ஆய்வு செய்து, புள்ளிவிபரங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும். தேவைப்படும் இனங்களுக்கு கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாநகராட்சி குழுவினர் சேலத்திலும், சேலத்தைச் சேர்ந்தவர்கள் கோவையிலும் ஆய்வு செய்ய வேண்டும். துாத்துக்குடி குழுவினர் ஈரோடு, தாம்பரம் குழுவினர் திருப்பூர், திருப்பூர் குழுவினர் மதுரை, நாகர்கோவில் குழுவினர் துாத்துக்குடி மாநகராட்சிகளில் ஆய்வு செய்ய வேண்டும். இதேபோல், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ள, 10 நகராட்சிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆய்வறிக்கையை அதற் குரிய ஆதாரம் மற்றும் ஆவணங்களுடன் ஆக., 2ம் தேதிக்குள், msectiontncma@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும், பதிவு தபால் மூலமாகவும் அனுப்ப, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.