/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்துறை வசமானது சின்னக்கல்லார்; கவலையில் தொழிலாளர்கள்
/
வனத்துறை வசமானது சின்னக்கல்லார்; கவலையில் தொழிலாளர்கள்
வனத்துறை வசமானது சின்னக்கல்லார்; கவலையில் தொழிலாளர்கள்
வனத்துறை வசமானது சின்னக்கல்லார்; கவலையில் தொழிலாளர்கள்
ADDED : பிப் 28, 2025 11:26 PM
வால்பாறை, ; வால்பாறை சின்கோனா பகுதியில், மேல்நீராறு, கீழ்நீராறு ஆகிய அணைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டம் கடந்த, 2012ம் ஆண்டு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
அடர் வனப்பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளதாலும், வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாலும், 'டான்டீ' தேயிலை தோட்டம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இங்குள்ள லாசன், ரயான் ஆகிய இரண்டு கோட்டங்களில் தற்போது, 400 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சின்னக்கல்லார் அணைப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள், பல்வேறு காரணங்களால் வெளியேறிய நிலையில், தற்போது ஐந்து குடும்பங்கள் மட்டுமே உள்ளன.
இதனையடுத்து, வனவிலங்குகளிடம் இருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் அருகில் உள்ள எஸ்டேட்டில் பணிபுரிய வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இங்குள்ள கிளை அஞ்சலத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவும், சின்னக்கல்லாருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை தடை செய்யவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால், 'டான்டீ' தொழிலாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். தொழிலாளர்களை வெளியேற்றும் திட்டத்துக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சின்னக்கல்லார் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி உள்ளதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாலும், தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'டான்டீ' தொழிலாளர்களை வெளியேற்றும் எண்ணம் தற்போதைக்கு இல்லை,' என்றனர்.