விபத்தில் தொழிலாளி பலி
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் அருண், 41; தொழிலாளி. இவர் தனது பைக்கில் குறிச்சி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாணவரிடம் நகை பறிப்பு
கோவை, அன்னுாரை சேர்ந்தவர் சக்திவேல், 20; பீளமேட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சக்திவேல் தனது நண்பர்களுடன் கல்லுாரி அருகே உள்ள டீக்கடையில் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த இருவர் சக்திவேலிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த, 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றனர். சக்திவேல் புகாரின் படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
போன் திருடிய தொழிலாளி கைது
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 42, டெய்லர்; இவர் கணேசபுரம் பகுதியில் நின்றிருந்தர். அப்போது அங்கு வந்த நபர் அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை திருடி தப்பி சென்றார். மாணிக்கம் புகாரின் படி ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில் போனை திருடியது புலியகுளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி, 42, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

