காரில் வந்து வழிப்பறி; 2 பேர் கைது
கோவை ஒண்டிப்புதுாரை சேர்ந்தவர் செல்வராஜ், 31; தொழிலாளி; இவர் தனது பைக்கில் இருகூர் மேம்பாலத்தின் கீழ் சென்றார். அப்போது காரில் வந்த, 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றனர். செல்வராஜ் புகாரின் படி, சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், பணத்தை பறித்தது பீளமேடு நேருநகரை சேர்ந்த சூரிய பிரசாந்த், 24, திருச்சி மாவட்டம் பாலக்கரையை சேர்ந்த பிரிஜிஸ் பிரசாந்த், 25, என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 2 கத்தி, கார் மற்றும் ரூ.5ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பணம் பறித்த வாலிபர் கைது
கோவை சவுரிபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜய், 23; சிக்கன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து சவுரிபாளையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவருக்கு ஏற்கனவே அறிமுகமான அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் கமலேஷ் ஆகியோர் விஜயிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பின் விஜய் வைத்திருந்த, ரூ.4,500 மற்றும் மொபைல் போனை பறித்து தப்பி சென்றனர். விஜய் புகாரின் படி பீளமேடு போலீசார் சவுரிபாளையத்தை சேர்ந்த பாலாஜி, 27, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கமலேசை தேடி வருகின்றனர்.
ரயில் மோதி ஆண் பலி
கோவை போத்தனுார் - இருகூர் ரயில்வே தண்டவாளம் ஒண்டிப்புதுார் மேம்பாலம் அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் போத்தனுார் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை சோதனை செய்தனர். அதில் அவரது வலது கையில் சுதா என பச்சை குத்தப்பட்டு இருந்தது.
ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து ரயில் மோதி இறந்த அந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

