விபத்தில் வாலிபர் பலி
கோவை பி.என்.புதுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 38; இவர் பைக்கில் மருதமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். வேளான் பல்கலைக்கழகம், 7-வது கேட் அருகே வந்த போது திடீரென தடுமாறி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீது மோதி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த சதீஷ்குமார், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
--பஸ் கண்ணாடியை உடைத்த நபர்
மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 48; இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு, தனியார் பஸ்சை ஓட்டி வந்தார்.
கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, அந்த வழியாக மதுபோதையில் பைக்கில் வந்த நபர் பஸ்சை தடுத்து நிறுத்தினார். பின் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து தப்பினார். செந்தில்குமார் புகாரின்படி, கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பூ வியாபாரியிடம் நகை பறிப்பு
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் இந்திராணி, 61; பூ வியாபாரி. நேற்று முன்தினம் ராமநாதபுரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் பூ வாங்குவது போல நடித்து, அவரது கழுத்தில் அணிந்திருந்த, 2 பவுன் தங்க நகையை பறித்தார். பின் பைக்கில் தயாராக இருந்த, மற்றொரு வாலிபருடன் தப்பிச் சென்றார். இந்திராணி புகாரின் படி, ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.