கத்தியை காட்டி மிரட்டல்
ராமநாதபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன். அருகே ஸ்ரீபதி நகரில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரும் நண்பர் ஹரியும் ராமநாதபுரம், 80 அடி ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அங்கு நின்றுகொண்டிருந்த அம்மன்குளம் பகுதியை சேர்ந்த வினோத், 38, இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளார். முனீஸ்வரன் ரூ.1,750ஐ கொடுத்துள்ளார். ராமநாதபுரம் போலீசில் இவர் அளித்த புகாரின் பேரில், வினோத் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.
3 சவரன் நகை 'அபேஸ்'
ரத்தினபுரி, கண்ணப்ப நகரை சேர்ந்தவர் வசந்தாமணி,65; கட்டுமான தொழிலாளி. இவர் எரு கம்பெனி ஸ்டாப்பில் இருந்து, 4 வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ்சில் ஏறி வடகோவை சென்றார். பஸ்சில் இருந்து கீழே இறங்கியதும், தனது கழுத்தில் இருந்த, 3 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரிந்து, சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா பறிமுதல்
ரேஸ்கோர்ஸ் போலீசார் ஸ்டேட் பாங்க் ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில்வே ஸ்டேஷன் எதிரே வாகனங்கள் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த, உப்பிலிபாளையத்தை சேர்ந்த சூரியபிரகாசை,20, பிடித்து விசாரித்தனர். சோதனையில், அவரிடம் 140 கிராம் கஞ்சா இருந்தது. பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.