மனைவியை கட்டையால் தாக்கியவருக்கு சிறை
பி.என். புதுாரை சேர்ந்தவர் அர்ஜூன் புருசோத்தமன், 34; மனைவி நித்யா, 34. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான அர்ஜூன், தினசரி குடித்து விட்டு மனைவியிடம் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சண்டையால், நித்யா குழந்தைகளை அழைத்துக்கொண்டு, தன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, மதுபோதையில் நித்யாவின் தாய் வீட்டுக்கு சென்ற அர்ஜூன், நித்யா மற்றும் அவரின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கியுள்ளார். முகத்தில் பலத்த காயமடைந்த நித்யா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து, அர்ஜூனை கைது செய்தனர்.
இளைஞரை தாக்கிய வடமாநில வாலிபர்
கக்கன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வர், 19; பெயின்டிங் தொழிலாளி. இவர் அப்பகுதியில் தனது நண்பரான முகமது ராஜாவுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த, முகமது ராஜாவின் மற்றொரு நண்பரான அமீர் கான், 25 ஈஸ்வரனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அமீர் கான், ஈஸ்வரனை தாக்கினார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. ஈஸ்வரனின் கதறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த அமீர் அங்கிருந்து தப்பினார். புகாரின் அடிப்படையில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து, அமீர் கானை கைது செய்தனர்.
தனியார் பேருந்து மோதி மூதாட்டி பரிதாப பலி
காந்திபுரம் ஜி.பி.சிக்னல் அருகில், சாலையை கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி மீது மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை வந்த தனியார் பேருந்து மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது, பேருந்தின் பின் சக்கரம் ஏறியது.
இதில் பலத்த காயமடைத்த மூதாட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், பேருந்து ஓட்டுநர் சிலம்பரசன், 34 மீது வழக்கு பதிவு செய்தனர்.