பூட்டை உடைத்து நகை திருட்டு
வடமதுரை, ஸ்ரீ தேவி நகரை சேர்ந்தவர் அபிராமி, 49. அவர் வீட்டின் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், பணியாற்றி வருகிறார். தினமும் காலையில் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விடுவார். கடந்த 19ம் தேதியும், காலை 8:30 மணிக்கு பணிக்கு செல்வதற்காக, வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர், மாலை பணிமுடிந்து வந்து பார்த்த போது, முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த சுமார், 10 சவரன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் திருட்டு போயிருந்தது. அவர் துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தவறி விழுந்து பெயின்டர் பலி
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 62. இவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தங்கி, பெயின்டிங் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் பெயின்டிங் வேலைக்கு சென்றார். மதியம் உணவு சாப்பிட்ட பின் வீட்டின் மொட்டை மாடியில், சிறிது நேரம் ஓய்வு எடுக்க படுத்தார். அப்போது, திடீரென கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர் லட்சுமணனை ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போதை மாத்திரை பறிமுதல்
ரத்தினபுரி போலீசார், சாஸ்திரி நகர் மயானம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தனர். அவர்களிடம் சோதனை செய்த போது, 50 கிராம் கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள் வைத்திருந்தனர். அவர்கள், கணபதியை சேர்ந்த வெங்கடேஷ், 33, திருப்பூரை சேர்ந்த ராசியப்பன், 33 என தெரிந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

