மூதாட்டியிடம் செயின் பறிப்பு
சவுரிபாளையத்தை சேர்ந்தவர் பத்மினி, 60. இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த, 3ம் தேதி இரவு மூதாட்டி கடையை மூடிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், மூதாட்டி கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றார். மூதாட்டியின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், பைக்கில் ஏறி தப்பிச் சென்றார். மூதாட்டி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருநங்கை தற்கொலை
காந்தி பார்க், இமான் பாய் சந்து பகுதியை சேர்ந்தவர் கவுசி, 24; திருநங்கை. இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாதவன் என்பவருடன் திருமணமானது. இந்நிலையில், மாதவன் கவுசியின் தங்கையுடன் பழகி வந்துள்ளார். கவுசி இருவரையும் கண்டித்தார். இந்நிலையில், அவரின் தங்கை திருச்சியில் உள்ள அவரின் தாய் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
கவுசியின் கணவர் மாதவனும் திருச்சி சென்றுள்ளார். கவுசி விரக்தியில் இருந்தார். கடந்த 4ம் தேதி கவுசியின் உறவினர் கவுசியின் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, கவுசி துப்பட்டா பயன்படுத்தி, துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சிறையில் கைதி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன், 46; 2024ம் ஆண்டு ஜூலை மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, 18வது பிளாக்கில் உள்ள 17வது சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சிறை அறையில் சுயநினைவின்றி கிடந்தார். அவரை மீட்டு சிறை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், டாக்டரின் பரிந்துரையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா வாலிபர்கள் கைது
சிங்காநல்லுார் பகுதியில், போலீசார் சோதனை மேற்கொண்ட போது, ஒண்டிபுதுார் பாலத்தின் கீழ் வாலிபர் ஒருவர் கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் இருகூரை சேர்ந்த தாமரைக்கண்ணன், 23 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சரவணம்பட்டி, எப்.சி.ஐ., ரோடு டாஸ்மாக் மதுக்கடை அருகில் கணபதியை சேர்ந்த தமிழ்வாணன், 21 என்பவர் கஞ்சா விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சரவணம்பட்டி போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.