போன் திருடியவருக்கு சிறை
புலியகுளம், அலமேலு மங்கம்மாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர், 50. இவர் கடந்த 6ம் தேதி அதிகாலை தனது வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, ஏதோ சத்தம் கேட்டு துாக்கத்தில் இருந்து எழுந்தார். கதவு அருகில் ஒருவர் இருப்பதை பார்த்து சத்தம் போட்டார். பாஸ்கரின் சத்தம் கேட்டதும் அந்நபர் தப்பி ஓடினார். பாஸ்கர் வீட்டில் சோதனை செய்து பார்த்த போது, மொபைல் காணாமல் போயிருந்தது. அவர் புலியகுளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, மொபைல் திருடிச்சென்றது, புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 30 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வாலிபர் மர்ம மரணம்
சிங்காநல்லுார், காமராஜர் ரோட்டை சேர்ந்தவர் மணி மகன் மாணிக்கராஜ், 44. மாணிக்கராஜூக்கு திருமணமாகவில்லை. கோணவாய்க்கால் பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் மதுவுக்கு அடிமையாகியிருந்தார். கடந்த 4ம் தேதி இரவு மாணிக்கராஜை, பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துள்ளார். அதன் பின் அவரை யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு மாணிக்கராஜின் உறவினர் ஒருவர், அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது, துாக்கில் தொங்கியநிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சாலை விபத்தில் தாய், மகன் காயம்
கண்ணம்பாளையம், டி.வி.கே., நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய வினோத், 36. இவர் தனது தாயாருடன் கடந்த 5ம் தேதி, எல் அண்ட் டி பைபாஸ் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த டாடா கார் ஒன்று, வினோத்தின் இரு சக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் வினோத் மற்றும் அவரின் தாயார் மேரி, 67 ஆகியோர் கீழே விழுந்தனர். வினோத்துக்கு தலை, கைகளிலும், மேரிக்கு கைகளிலும் காயம் ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.