பஸ் டிரைவர் மீது தாக்குல்
வால்பாறையை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி, 46; அரசு பஸ் டிரைவர். இவர் கோவைப்புதுார் - துடியலுார் செல்லும் பஸ்சை கடந்த 10ம் தேதி ஓட்டி சென்றார். அப்போது, ஆர்.ஜி. வீதி பகுதியில் தள்ளுவண்டியை எதிர் திசையில் தள்ளி வந்த இருவர், திடீரென சாலையின் குறுக்கே தள்ளுவண்டியை தள்ளினர். இதனால், பாலதண்டாயுதபாணி கண்டித்தார். ஆத்திரமடைந்த அவர்கள் டிரைவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கி தாக்கினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலதண்டாயுதபாணி அளித்த புகாரில், வெரைட்டி ஹால் போலீசார் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அதுல் குமார், 36 மற்றும் விஜய் பாபு, 49 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வழிப்பறி வாலிபர் கைது
கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கலாகிருஷ்ணன், 23. இவர் தனது மொபைல் போனை அடமானம் வைத்து ரூ. 20 ஆயிரம் கடன் வாங்கிக்கொண்டு, செட்டி வீதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஏற்கனவே அறிமுகமான பொம்மனாம்பாளையத்தை சேர்ந்த லிங்கேஸ்வரன், 24 என்பவர் பைக்கில் வந்தார்.
அவர், கலா கிருஷ்ணனை பைக்கில் ஏற்றிச் சென்று, செட்டி வீதியில் இறக்கிவிட்டார். பின்னர் அங்கிருந்து சென்ற லிங்கேஸ்வரன், தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் அங்கு வந்தார். கலா கிருஷ்ணனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அவர் கொடுக்க மறுத்ததால், இருவரும் கலா கிருஷ்ணனை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 17,500 பணத்தை பறித்து சென்றனர். சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து லிங்கேஸ்வரனை, கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய கார்த்திக் குறித்து விசாரிக்கின்றனர்.
மனைவியை தாக்கியவருக்கு சிறை
சாய்பாபா காலனி, ராதாகிருஷ்ணா வீதியை சேர்ந்தவர் சாலினி, 25; கணவர் வசந்த், 32. இருவருக்கும் இடையே, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சாலினி வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு வந்த வசந்த், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். சாலினி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, வசந்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வாலிபர் மர்ம மரணம்
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ரிக்கேஷ் குமார், 26; கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில், ஆர்க்கிடெக்டாக பணியாற்றி வந்தார். காந்திபுரம் 100 அடி ரோட்டில் அறை எடுத்து தங்கியிருந்தார். கடந்த 11ம் தேதி ரிக்கேஷின் அறை இருக்கும் கட்டடத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில், பணியாற்றும் சரவணன் என்பவர், ரிக்கேஷின் அறைக்கு சென்று பார்த்த போது, அவர் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.