ADDED : பிப் 27, 2025 12:07 AM
பஸ் டிரைவர்கள் மோதல்
உக்கடம் பஸ் ஸ்டாண்டில், பொள்ளாச்சி செல்லும் இரண்டு தனியார் பஸ்கள் வந்து நின்றன. அப்போது, நேரம் தொடர்பாக டிரைவர்கள் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. அது, கைகலப்பாக மாறியது. இருவரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டு கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரையும் கட்டுப்படுத்தினர். இருவர் மீதும் உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விடுதியில் மாணவி தற்கொலை
திருப்பூர் பத்மினி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 48; இவரது மகள் ஸ்ரீ ஹரிணி, 19. கோவை சிட்ரா அருகில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 22ம் தேதி விடுதியில் இருந்து திருப்பூரில் இருக்கும் தனது வீட்டுக்கு சென்றுவிட்டு 24ம் தேதி விடுதிக்கு திரும்பினார். துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து விடுதி வார்டன் ஹரினியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பீளமேடு போலீசார் மாணவியின் உடலை மீட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மனைவி தற்கொலை
திருவள்ளூரை சேர்ந்தவர் பழனி, 52; இவரது மகள் சசிகலா, 25. சசிகலாவுக்கு, ஹரிகுமார் என்பவருடன் திருமணம் ஆனது. தம்பதியினர் கோவை துடியலுாரில் வசித்து வந்தனர். கடந்த 24ம் தேதி கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஹரிகுமார் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு, வந்து பார்த்தபோது, சமையல் அறையில் சசிகலா துாக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். துடியலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குட்கா விற்றவருக்கு சிறை
வெரைட்டி ஹால் ரோடு போலீசார், நேற்று மரக்கடை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் சதீஷ்குமார்,25 என்பவர் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 500 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, சதீஷ்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.