ADDED : மே 03, 2024 12:32 AM
பணம் பறித்த மூவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த சதீஷ்,35, கோவை ஒலம்பஸ் பகுதியிலுள்ள டாஸ்மாக்கில் கேஷியராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள பார்க் பகுதியில் நடந்து சென்ற போது, ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத்,23, ஸ்ரீ ஹரி,21, சந்திரகுமார்,20, ஆகியோர், கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாய் வழிப்பறி செய்தனர். ராமநாதபுரம் போலீசார் விசாரித்து, மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
பா.ம.க., பிரமுகருக்கு மிரட்டல்
கோவை, கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் அசோக் ஸ்ரீ நிதி. கோவை மாவட்ட பா.ம.க., செயலாளரான இவரது மொபைல் போனுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய போது, மறுமுனையில் பேசிய நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். அந்த மொபைல் போன் யாருடையது என்பது குறித்து விசாரித்த போது, 'மை வி3' என்ற ஆன்லைன் நிதி நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, அந்நிறுவனத்தை சேர்ந்த சத்யா ஆனந்த், விஜய் ராகவன் ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கார் கண்ணாடி உடைப்பு
கோவை, தடாகம் ரோட்டை சேர்ந்தவர் பத்ரி,40. இரு சக்கர வாகன மெக்கானிக். இவருக்கு சொந்தமான காரை , பொன்னையாராஜபுரம், ஹனுமன் சேனா ஆபிஸ் முன் நிறுத்தி இருந்த போது, மர்ம ஆசாமிகள் பின் பக்க கண்ணாடியை உடைத்தனர். வி.எச்., ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
நர்சிங் மாணவி தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர், சாரல்விளை பகுதியை சேர்ந்த செல்வன் மகள் பபிஷா,18, கோவை, சரவணம்பட்டியில் உள்ள கல்லுாரியில், பி.எஸ்.சி., நர்சிங் படித்து வந்தார். கல்லுாரி விடுதியில் தங்கிய அவர், நேற்று முன்தினம், நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்தார். சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.