பணம் பறித்த, 4 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் குணா, 28, கோவை ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு தனது அறைக்கு நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி குணா வைத்திருந்த, 500 ரூபாயை பறித்து தப்பி சென்றார். குணா புகாரின் படி ராமநாதபுரம் போலீசார் கோவை அம்மன் குளத்தை சேர்ந்த பிரவீன் என்கிற மாஸ் பிரவீன், 26, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
*கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகரை சேர்ந்தவர் சித்தரேஸ், 33, ஆட்டோ டிரைவர்; இவர் நேற்று முன்தினம் அசோக் நகரில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சில வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, 700 ரூபாயை பறித்து தப்பிச் சென்றனர். சித்தரேஸ் புகாரின் படி கவுண்டம்பாளையம் போலீசார் முல்லை நகரை சேர்ந்த ஹரிஹரன், 24, சந்தோஷ்குமார், 24, அருண்குமார், 23, ஆகிய மூவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பெண் துாக்கிட்டு தற்கொலை
தென்கரை, கிருஷ்ணாபுரம் புதூர், சக்சஸ் கார்டனை சேர்ந்தவர் ஆறுமுகம்,48. கூலித்தொழிலாளி. இவருக்கு இந்திராணி,46 என்ற மனைவியும், ரூபேஷ் குமார் என்ற மகனும் உள்ளனர். இந்திராணி, துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம், மாலை, இந்திராணி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்திராணிக்கு, மகன் ரூபேஸ்குமார் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இந்திராணி போனை எடுக்காததால், பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணை, ரூபேஸ்குமார் போனில் தொடர்பு கொண்டு, வீட்டிற்கு சென்று தனது அம்மாவிடம் போன் கொடுக்க கூறியுள்ளார்.
இதனையடுத்து, அப்பெண், இந்திராணியின் வீட்டிற்குள்ளே சென்றபோது, இந்திராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, பேரூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்னை காரணமாக, இந்திராணி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.