ADDED : மே 24, 2024 01:28 AM
9 வழிப்பறி வழக்கில் சிக்கியவர் மீண்டும் கைது
வடவள்ளி, சோமையம் பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். கால் டாக்சி டிரைவரான இவர், அங்குள்ள தனியார் பள்ளி அருகில் நடந்து சென்றார். அப்போது, அன்னுார், செல்லனுார், ஓதிமலை ரோட்டை சேர்ந்த கண்ணன்,22, வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, நடராஜன் பாக்கெட்டிலிருந்து 450 ரூபாயை பறித்து தப்பினார்.
புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் விசாரித்து, கண்ணனை கைது செய்தனர். விசாரிக்கையில், ஏற்கனவே ஒன்பது வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன், ஜாமினில் வெளியே வந்து மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்தி கண்ணனை சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
நாமக்கல் மாவட்டம், சங்ககிரி, பவானி ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடித்த இவர், சரவணம்பட்டியில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்றார். விளாங்குறிச்சி ரோட்டில் நின்று கொண்டிருந்த மணிகண்டனிடம் போலீசார் விசாரித்த போது, விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விபச்சார புரோக்கர் 4 பேர் கைது
கோவை, பீளமேடு, தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக, பழநியை சேர்ந்த சீனிவாசன், 29, விருதுநகரை சேர்ந்த சின்னகருப்பு,21, திருப்பூரை சேர்ந்த விக்னேஷ்வரன்,29, மேலப்பாளையத்தை சேர்ந்த வசந்தி,43, ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.