ADDED : ஆக 16, 2024 08:16 PM
பீர் பாட்டிலால் 'டமார்'
கோவை, தெற்கு உக்கடம், புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,33; கட்டுமான பணியாளர். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு இவர் லங்கா கார்னர் அருகே குடிபோதையில் நின்றிருந்தார். அங்கு வந்த ஏற்கனவே இவருக்கு தெரிந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்,35, குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். தர மறுத்த பாலகிருஷ்ணனின் தலையில், பீர் பாட்டிலால் செந்தில் தாக்கியுள்ளார். காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் அளித்த புகாரின் பேரில், உக்கடம் போலீசார் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இளைஞருக்கு கத்தி குத்து
ரத்தினபுரி, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சாய் லியோன்,20. கடந்த, 14ம் தேதி இரவு, 9:00 மணிக்கு அதே பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர், குடிபோதையில் தகாத வார்த்தைகள் பேசியுள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய சாய் லியோனின் இடது கை, இடுப்பு பகுதியில் கத்தியால் கிழித்துள்ளார். சாய் லியோன் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் முரளி தப்பிவிட்டார். கோவை அரசு மருத்துவமனையில் சாய் லியோன் சேர்க்கப்பட்டார். ரத்தினபுரி போலீசில் அவர் அளித்த புகாரின்படி, முரளியை போலீசார் தேடி வருகின்றனர்.
கம்பெனியில் திருட்டு
கணபதிபுதுாரை சேர்ந்தவர் நித்யானந்தம்,56. 'லேத் கம்பெனி' நடத்திவரும் இவரிடம் சூர்யா ராபின் என்பவர், கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், டை பிளாக், பன்ச் பிளாக் உட்பட ரூ.32 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள், கம்பெனியில் இருந்து திருடுபோயுள்ளது. 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை நித்யானந்தம் ஆய்வு செய்தபோது, சூர்யா ராபின் திருடி சென்றது தெரிந்தது. சரவணம்பட்டி போலீசில், நித்யானந்தம் புகார் அளித்தார். சூர்யா ராபினை போலீசார் தேடுகின்றனர்.

