ADDED : மார் 06, 2025 11:53 PM
லாட்டரி விற்றவர்கள் கைது
துடியலுார், முத்துநகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் லாட்டரி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று, அவரிடம் இருந்த 12 கேரளா லாட்டரி டிக்கெட்கள், ஒரு மொபைல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சாஜி, 50 என்பவரை கைது செய்தனர்.
* பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ., வினோத் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுண்டக்காமுத்துார் பஸ் ஸ்டாப் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட செந்தில் ராஜா, 46 என்பவரை கைது செய்தனர். அதேபோல, மாதம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட, மோகன்ராஜ், 41 என்பவரையும் பேரூர் போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சிமாத் டுடு, 44. இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். சிமாத் போத்தனுார் ரயில் நிலையத்தில் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி வேலைக்கு வரவில்லை. இதனால், அவரின் மேற்பார்வையாளர் ரமேஷ்குமார் அவருடன் அறையில் தங்கியிருப்போரிடம் கேட்டுள்ளார். அதற்கு, அவரின் இரு மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் அவர் மன வருத்தத்தில் இருப்பதால் பணிக்கு வரவில்லை என தெரிவித்தனர். பின்னர், பணி முடிந்து, சென்று பார்த்தபோது அறையில் கேபிள் ஒயரை பயன்படுத்தி சிமாத் துாக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். சம்பவம் குறித்து போத்தனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் தற்கொலை
குனியமுத்துார், பார்க் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் சரோஜா, 57. இவரது கணவர் ராஜேந்திரன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.