/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெரிய நகரமாக விரிவடைந்து விட்டது கோவை புது ரூட்டுல தான்...! டவுன் பஸ் அல்லது மினி பஸ் இயக்கம் தேவை!
/
பெரிய நகரமாக விரிவடைந்து விட்டது கோவை புது ரூட்டுல தான்...! டவுன் பஸ் அல்லது மினி பஸ் இயக்கம் தேவை!
பெரிய நகரமாக விரிவடைந்து விட்டது கோவை புது ரூட்டுல தான்...! டவுன் பஸ் அல்லது மினி பஸ் இயக்கம் தேவை!
பெரிய நகரமாக விரிவடைந்து விட்டது கோவை புது ரூட்டுல தான்...! டவுன் பஸ் அல்லது மினி பஸ் இயக்கம் தேவை!
ADDED : ஜூன் 25, 2024 02:34 AM

-நமது நிருபர்-
கோவை நகரம் விரிவடைந்து வருவதால், புதிய வழித்தடங்களில் டவுன்பஸ் அல்லது மினிபஸ்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை நகரின் வளர்ச்சி காரணமாக, மாநகராட்சியாக வரையறுக்கப்பட்டுள்ள 254 சதுர கி.மீ., பரப்பளவைத் தாண்டி, சுற்றிலும் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துப் பகுதிகள், கோவையுடன் பின்னிப்பிணையும் அளவுக்கு, புதிய குடியிருப்புகளும், வணிகப்பகுதிகளும் பெருகியுள்ளன.
அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களைத் தவிர, சென்னையைப் போல, கோவையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற மக்கள் போக்குவரத்துத் திட்டங்கள் எதுவுமில்லை.
அதனால், புதிதாக உருவாகியுள்ள பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பல லட்சம் மக்களும், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் மற்றும் சொந்த வாகனங்களையே நம்பியுள்ளனர்.
பல ஆண்டுகளாக முடக்கம்
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கொண்டு வரப்பட்ட மினிபஸ் திட்டம், பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைந்த மினிபஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
சேவையுள்ள வழித்தடங்களில் 8 கி.மீ., சேவையில்லாத வழித்தடங்களில் 18 கி.மீ., அதிகபட்சமாக 25 கி.மீ., துாரத்துக்கு, புதிய மினி பஸ்களை இயக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதிலும் சென்னைக்கு முன்னுரிமை அளித்து, எந்தெந்த வழித்தடங்களில் மினிபஸ்களை இயக்கலாம் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிதாகி வருகிறது கோவை
கோவை நகரமும் நாலாபுறங்களிலும் விரிவடைந்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளுக்கும் புதிய வழித்தடங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் அதிகரித்துள்ளது.
இவற்றில் பல பகுதிகளுக்கு, அரசு டவுன்பஸ்களை இயக்கினாலே, பெருமளவில் வரவேற்பும், வருவாயும் கிடைக்கும்.
ஒரு சில பகுதிகளில், மினி பஸ்களை இயக்க வேண்டுமென்று பொது மக்களே கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் கவுன்சிலர்களும், இதற்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்றனர்.
விண்ணப்பம் வரவில்லை
ஆனால் நேற்று வரை, கோவையில் புதிய திட்டத்தில் மினிபஸ்களை இயக்குவதற்கு அனுமதி கோரி, ஒரு விண்ணப்பமும் வரவில்லை என்று, கோவை இணை போக்குவரத்து கமிஷனர் சிவகுமார் தெரிவித்தார்.
ஒரு வேளை விண்ணப்பங்கள் வராவிடினும், புதிய வழித்தடங்களை உருவாக்கி, டவுன்பஸ் அல்லது மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் முக்கியக்கடமை.
அதற்கு போக்குவரத்துத்துறை, போக்குவரத்துக்கழகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை ஒருங்கிணைத்து திட்டம் வகுப்பது அவசியம்!