/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கட்டண உயர்வு குறித்து கோவை தொழில்துறையினர் பேட்டி
/
மின்கட்டண உயர்வு குறித்து கோவை தொழில்துறையினர் பேட்டி
மின்கட்டண உயர்வு குறித்து கோவை தொழில்துறையினர் பேட்டி
மின்கட்டண உயர்வு குறித்து கோவை தொழில்துறையினர் பேட்டி
ADDED : ஜூலை 15, 2024 11:45 PM

ராஜேந்திரன், கட்டுமான பொறியாளர், சுந்தராபுரம்
முதலில் வீட்டு வரி உயர்த்தினார்கள். பிறகு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது, மின் கட்டணம் உயர்த்தியிருக்கிறார்கள். இதுபோன்ற கட்டணங்கள் உயர்வால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். ஆனால், வருமானம் உயர்ந்தபாடில்லை. இதெல்லாம் மிகப்பெரிய சுமையாகத்தான் கருத வேண்டியுள்ளது. எனவே, மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கார்த்திகேயன், கொடிசியா தலைவர்
ஏற்கனவே தொழில்துறை மிகவும் மோசமாக உள்ளது. இப்போது, கட்டண உயர்வு வந்தால், எத்தனை, குறுந்தொழில்கள் மூடப்படும் என கூறமுடியாது. 3 ஆண்டுகளாக, மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வருகிறோம். கடந்தாண்டு, 6 சதவீதம் உயர்ந்தது. இந்தாண்டு, 5 சதவீதம் உயர்த்தியுள்ளனர். குறுந்தொழில்களுக்கு, சப்ளையர்கள், 5 சதவீதம் உயர்த்தி கொடுப்பதில்லை. பின், எப்படி தாக்குப்பிடிக்க முடியும். தமிழக அரசு, மின் கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்.
ஜேம்ஸ், டேக்ட் தலைவர்.
தமிழகத்தில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணத்தில், யூனிட் ஒன்றிற்கு, 35 பைசா வரையிலும், கிலோவாட்டிற்கு, 4 ரூபாய் வரையிலும், உயர்த்திக்கொள்வதற்கு, குறிப்பாக, முன் தேதியிட்டு, ஜூலை 1 முதல் அமல்படுத்துவதற்கான அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி, தமிழகத்தில் இயங்கி வரும் சிறு, குறு தொழில்களுக்கு மிகுந்த மனவேதனையும், கடுமையான நெருக்கடியும் உருவாக்கியுள்ளது. மின்கட்டண உயர்வு, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. மின் கட்டண உயர்வை தடுத்து நிறுத்துவதோடு, ஏற்கனவே நாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
கனகராஜ், குறுந்தொழில் முனைவோர்.
கட்டணத்தை உயர்த்துவதில், கண்ணும், கருத்துமாக உள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம், 12 கிலோவாட்க்கு கீழ் உள்ள உற்பத்தி நிறுவனங்களின் உரிமையை , 3ஏ1 தொடர்பாக பிறப்பித்த தெளிவுரை, பிழை மற்றும் குழப்பத்துடன் உள்ளதை இன்று வரை சரிசெய்யவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல்படி, கோவை மாவட்டத்தில் மட்டும், உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு, 12 கிலோவாட்டுக்கு கீழ் சுமார், 50 ஆயிரம், 3பி இணைப்புகள் உள்ளன. இதில், 30 மட்டுமே, 3ஏ1க்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் சிறிதும் கவலைப்படவில்லை.

