/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவு டூ பொள்ளாச்சி வரை சேலத்தில் சேர்க்கணும் ரயில்வேக்கு கோவை தொழில் அமைப்பினர் கோரிக்கை
/
கிணத்துக்கடவு டூ பொள்ளாச்சி வரை சேலத்தில் சேர்க்கணும் ரயில்வேக்கு கோவை தொழில் அமைப்பினர் கோரிக்கை
கிணத்துக்கடவு டூ பொள்ளாச்சி வரை சேலத்தில் சேர்க்கணும் ரயில்வேக்கு கோவை தொழில் அமைப்பினர் கோரிக்கை
கிணத்துக்கடவு டூ பொள்ளாச்சி வரை சேலத்தில் சேர்க்கணும் ரயில்வேக்கு கோவை தொழில் அமைப்பினர் கோரிக்கை
ADDED : ஆக 07, 2024 11:07 PM
கோவை, -கோவை முதல் திண்டுக்கல் வரையிலான ரயில் பாதையில், கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி சந்திப்பு வரையிலான பகுதியை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம் கோட்டத்துக்கு மாற்ற வேண்டுமென, தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற்ற நகரம் கோவை. வேலைக்காக வெளியூர்களில் இருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருகை தருகின்றனர். அதற்கேற்ப, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியிருக்கிறது.
நகரப்பகுதிக்குள் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய மனநிலைக்கு கோவை மக்கள் மெல்ல, மெல்ல மாற ஆரம்பித்து விட்டனர் என்பதற்கு உதாரணமாக, போத்தனுார் - மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் 'மெமு' ரயிலை சொல்லலாம்.
கல்லுாரி மற்றும் வேலைக்குச் செல்வோர் பலர், இதில் விரும்பி பயணிக்கின்றனர். ஒரு மணி நேரத்துக்குள் மேட்டுப்பாளையம் செல்ல முடிகிறது; கட்டணமும் குறைவு.
தொழில்துறையினர் கோரிக்கை
இதேபோல், கோவை - திருப்பூர், கோவை - பொள்ளாச்சிக்கும் ரயில்கள் இயக்க வேண்டுமென்கிற கோரிக்கை தொழில் அமைப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.
இவ்விரு சேவைகள் கொண்டு வந்தால், பணி நிமித்தமாக திருப்பூர் மற்றும் பொள்ளாச்சிக்கு சென்று வருபவர்களுக்கு பயன்படும். சாலை மார்க்கமாக போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்படும்; எரிபொருள் பயன்பாடு குறையும்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், ரயில் சேவை தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில், மூன்று ரயில்வே கோட்டங்களை அணுக வேண்டிய சிக்கல் தொடர்கிறது. அதாவது, போத்தனுார் ஸ்டேஷன் சேலம் கோட்டத்துக்குள் வருகிறது; கிணத்துக்கடவு,- பாலக்காட்டுக்கு செல்கிறது.
பொள்ளாச்சி சந்திப்புக்கு வெளியே கிழக்குப்புறம், மதுரை கோட்டத்தில் இருக்கிறது. 25 கி.மீ., துாரமுள்ள ரயில்வே பகுதிகள் மூன்று கோட்டங்களுக்குள் வருகின்றன.
இப்பகுதி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற, மூன்று கோட்டங்களுக்கு அலைய வேண்டியிருக்கிறது.
ஆகவே பயணிகளின் நலன் கருதி, கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி வரையிலான பகுதியை சேலம் கோட்டத்தில் சேர்க்க வேண்டுமென, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, கோவை தொழில் அமைப்பினர் கூறியதாவது:
தமிழகம் மற்றும் கேரளம் உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயில், கோவை ரயில்வே ஸ்டேஷன் அதிக வருவாய் ஈட்டும் மூன்றாவது ஸ்டேஷனாகும். ஒரு ரயில்வே கோட்டத்தில் உள்ள ஒரு பகுதியை பராமரிப்பு அல்லது வசதி அல்லது ஏதேனும் காரணங்களுக்காக மற்றொரு கோட்டத்தில் இணைப்பது பொதுவான நடைமுறை.
இதேபோல், கோவை முதல் திண்டுக்கல் வரையிலான ரயில் பாதையில் கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி சந்திப்பு வரையிலான பகுதியை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம் கோட்டத்துக்கு மாற்றுவதற்கான பணிகளை, தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் கோவையில் இருந்து, தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் மீட்டர் கேஜ் ரயில்கள் சீரமைக்கப்படுவதோடு, பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு கோவை சந்திப்பு வழியாக தினமும், 'மெமு' ரயில் சேவையை துவக்கும்.
இதன் வாயிலாக, நுாற்றுக்கணக்கான பயணிகள் பயனடைவர். இக்கோரிக்கையை நிறைவேற்ற, ரயில்வே அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.