/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மேயர் பதவி பறிப்பு? தி.மு.க., கவுன்சிலர்கள் 'பரபர'
/
கோவை மேயர் பதவி பறிப்பு? தி.மு.க., கவுன்சிலர்கள் 'பரபர'
கோவை மேயர் பதவி பறிப்பு? தி.மு.க., கவுன்சிலர்கள் 'பரபர'
கோவை மேயர் பதவி பறிப்பு? தி.மு.க., கவுன்சிலர்கள் 'பரபர'
ADDED : ஜூலை 02, 2024 11:20 PM
கோவை;கோவை மேயர் கல்பனா மீது, நிர்வாக ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சென்றதால், அவரிடம் தி.மு.க., தலைமை ராஜினாமா கடிதம் பெற்றிருப்பதாக, தகவல் பரவி வருகிறது.
கோவை மாநகராட்சி மேயராக இருப்பவர் கல்பனா, 40; செந்தில் பாலாஜி ஆதரவாளர். செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றதும், டெண்டர் கோப்புகளில் கையெழுத்திட, மேயர் தரப்பில், 3 சதவீதம் கமிஷன் கேட்பதாக, பகிரங்கமாக புகார் கிளம்பியது; அமைச்சர்கள் நேரு மற்றும் முத்துசாமி வரை சென்று, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கோப்புகள் முடக்கம்
பின், பொது நிதியில் கோரப்படும் டெண்டர்களில், வேறு நபர்கள் 'யாரும்' தலையிடக் கூடாது என்கிற நிபந்தனை மேயர் தரப்பில் வைக்கப்பட்டது. மண்டல அளவில் வார்டுகளுக்கு ஒதுக்கும் நிதி கோப்புகளும் மன்றத்துக்கு கொண்டு வர வேண்டும்; தனது கையெழுத்து இல்லாமல் 'ஒர்க் ஆர்டர்' வழங்கக் கூடாது என கட்டுப்பாடு விதித்து, கோப்புகளை நிறுத்தி வைத்தார். ஏராளமான கோப்புகள் மேயர் அலுவலகத்தில் முடங்கின.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேலிடத்துக்கு தகவல் தெரிவித்தார். மேலிட உத்தரவு வந்ததும் ஒரே நாளில், 100க்கும் மேற்பட்ட கோப்புகளில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். நிர்வாக ரீதியாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கடந்தாண்டே அவரை விடுவித்து விட்டு, வேறொருவரை மேயராக்க, துறை ரீதியாக ஆலோசிக்கப்பட்டது.
வார்டு ஒதுக்கீடு
லோக்சபா தேர்தலில், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஒவ்வொருவருக்கும் வார்டுகள் ஒதுக்கப்பட்டன. மேயருக்கு ஒதுக்கப்பட்ட, 19வது வார்டில், பா.ஜ., அதிக ஓட்டு பெற்றிருந்தது, கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கட்சியின் தலைமை நிலைய செயலாளரான பூச்சி முருகன், தொண்டாமுத்துார் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். அத்தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி எல்லை பகுதியில் ஓட்டு சேகரிக்க, கட்சி நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தினார்.
அவற்றில் மேயர் பங்கேற்பதை தவிர்த்தார். இது, அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கட்சி தலைமையில் புகார் அளித்ததை தொடர்ந்தே, மேயர் கல்பனா மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்பதை, தலைமை உணர்ந்தது.
ஓட்டு சதவீதம் குறைவு
லோக்சபா தேர்தலில், மாநகராட்சி பகுதியில் அதிகமான பூத்களில் பா.ஜ., முதலிடம் பெற்றிருப்பதும், சில பூத்களில் தி.மு.க., மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதே நிலை நீடித்தால், 2026 சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்கிற கேள்வியை, சீனியர் கவுன்சிலர்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, மேயர் கல்பனாவை மாற்றுவது என, கட்சி தலைமை முடிவெடுத்திருக்கிறது. அவரை சென்னைக்கு வரவழைத்து ராஜினாமா கடிதம் பெற்றிருப்பதாக, கட்சியினர் மத்தியில் தகவல் கசிந்து வருகிறது.
இதற்கிடையே, 9ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த மாமன்ற கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நேற்றைய மக்கள் குறைகேட்பு கூட்டமும், நிர்வாக காரணங்களால் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, 'ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை; காத்திருக்கிறோம்' என கூறினர்.