/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வறட்சியால் தென்னை நார் தொழிலும் பாதிப்பு! 60 சதவீதம் தொழிற்சாலைகள் முடக்கம்
/
வறட்சியால் தென்னை நார் தொழிலும் பாதிப்பு! 60 சதவீதம் தொழிற்சாலைகள் முடக்கம்
வறட்சியால் தென்னை நார் தொழிலும் பாதிப்பு! 60 சதவீதம் தொழிற்சாலைகள் முடக்கம்
வறட்சியால் தென்னை நார் தொழிலும் பாதிப்பு! 60 சதவீதம் தொழிற்சாலைகள் முடக்கம்
ADDED : மே 09, 2024 04:46 AM

பொள்ளாச்சி : தமிழகத்தில் கடுமையான வெயிலின் தாக்கத்தால், தென்னை நார் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 60 சதவீதம் தொழிற்சாலைகள் இயங்காமல் உள்ளன.
தென்னை விவசாயத்தை அடிப்படையாக கொண்டு, தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்து, கயிறு தயாரிக்கப்படுகிறது. அவை படகுகளை கட்டவும், வீடுகள் கட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
அதன்பின், இத்தொழில் இயந்திரமயமாக்கப்பட்டது. அதில், இருந்து, கயிறு, தென்னை நார் துகள் கட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
தற்போது, தமிழகத்தில், 27 மாவட்டங்களில், 8,500 தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மறைமுகமாகவும், நேரடியாகவும் பல லட்சம் கிராமப்புற மக்கள் பயன்பெறுகின்றனர்.
இந்தியாவில் இருந்து, ஆண்டுக்கு, 11 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நாரும், 23 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார் துகள் கட்டிகளும் தயாரிக்கப்படுகிறது. அவை, 5,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது; 16,000 கோடி ரூபாய்க்கு உள்நாட்டு வணிகமும் நடக்கிறது.
இந்நிலையில் வறட்சியால், தென்னை நார் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
விலை சரிவு
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:
கடந்த, மூன்று ஆண்டுகளாக தென்னை நார் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2021 - 22ம் ஆண்டில் கிலோ, 10 - 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தென்னை நார் தற்போது, 7 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ தென்னை நார் துகள், 27 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது; தற்போது, 14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தற்போது, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், 60 சதவீதம் தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்காமல் உள்ளன.
நீரின்றி தவிப்பு
ஒரு தென்னை நார் தொழிற்சாலைக்கு உற்பத்தி மற்றும் தொழிலாளர்களுக்கு, 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் லிட்டர் வரை நீர் தேவைப்படும். தற்போது, வறட்சியால் தென்னை நார் தொழிலுக்கு நீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
தேங்காய் மட்டை சிறுத்து விட்டது. ஆயிரம் மட்டையில், 95 கிலோ தென்னை நார் எடுத்த நிலையில், தற்போது, 60 - 65 கிலோ மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விலையும் உயராததால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சார கட்டணம் உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, ரஷ்யா - உக்ரைன் போர், உலக பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களினால், தென்னை நார் தொழில் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள சூழலில், வறட்சியால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியும், ஏற்றுமதியும், 50 சதவீதத்துக்கு குறைந்துள்ளது.
அரசு கவனிக்குமா?
மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தென்னை நார் தொழிலை மீட்டெடுக்க வேண்டும். வங்கியில் வாங்கிய கடனின் வட்டியை, ஐந்து மாதம் வரை விலக்கு அளிக்க வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு, 50 சதவீதம் மானியம் அரசு வழங்கிட வேண்டும். தனிநபர், தென்னை நார் பலகை தயாரிக்க, 75 சதவீதம் மானியம் வழங்கிட வேண்டும்.
வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை, தென்னை நார் தொழிற்சாலைக்கு பயன்படுத்திக்கொள்ள அரசு உதவ வேண்டும். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு, 10 டன் கோ கோபித் அரசு வழங்கினால், மரங்களை காப்பாற்ற முடியும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.