/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம், காரமடைக்கு ஒருங்கிணைந்த பை பாஸ்! சுந்தராபுரம் பாலத்துடன் சேர்த்து ஒரே டி.பி.ஆர்., தயாரிக்க முடிவு
/
மேட்டுப்பாளையம், காரமடைக்கு ஒருங்கிணைந்த பை பாஸ்! சுந்தராபுரம் பாலத்துடன் சேர்த்து ஒரே டி.பி.ஆர்., தயாரிக்க முடிவு
மேட்டுப்பாளையம், காரமடைக்கு ஒருங்கிணைந்த பை பாஸ்! சுந்தராபுரம் பாலத்துடன் சேர்த்து ஒரே டி.பி.ஆர்., தயாரிக்க முடிவு
மேட்டுப்பாளையம், காரமடைக்கு ஒருங்கிணைந்த பை பாஸ்! சுந்தராபுரம் பாலத்துடன் சேர்த்து ஒரே டி.பி.ஆர்., தயாரிக்க முடிவு
ADDED : ஜூன் 26, 2024 10:53 PM
பல ஆண்டுகள் இழுபறியாகி வரும் மேட்டுப்பாளையம் பை பாஸ் திட்டத்தில் மாற்றம் செய்து, காரமடையுடன் சேர்த்து ஒருங்கிணைந்த பை பாஸ் அமைக்க, மீண்டும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு, கோவை வழியாகச் செல்வோர், மேட்டுப்பாளையம் நகரைக் கடந்தே வாகனங்களில் செல்ல வேண்டும். விடுமுறை நாட்களிலும், சீசன் காலங்களிலும் மேட்டுப்பாளையம் நகரில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நகருக்குள் வாகனங்கள் வராமல் தவிர்க்கும் வகையில், பை பாஸ் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டது; ஆனால் இப்போதுள்ள ரோட்டிலேயே, 'டோல்கேட்' அமைப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
கடும் எதிர்ப்பு
அதனால் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி, திட்டம் கைவிடப்பட்டது. வேறு வழியின்றி, தமிழக அரசே, பை பாஸ் அமைக்க முடிவெடுத்தது. ஆணையம் போட்ட அதே திட்ட அறிக்கையை வைத்து, மீண்டும் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது.
மொத்தம் 7.25 கி.மீ., துாரத்துக்கு, நான்கு வழி புறவழிச்சாலை அமைக்க, 81 ஏக்கர் தனியார் நிலம் உட்பட, 86 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டு மென்று கணக்கிடப்பட்டது.
2016ல், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்பு, முந்தைய தேதியிட்டு, இந்த பை-பாஸ் திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து, அரசாணை (எண்:46 தேதி: 4-3-2016) வெளியிடப்பட்டது.
நிலமெடுப்புக்கு ரூ.99 கோடியே 35 லட்ச ரூபாயும், ரோடு அமைக்க ரூ.110 கோடியும் நிதியும் ஒதுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த 15(2) மற்றும் 15(1) நோட்டீஸ்களும் தரப்பட்டு, மக்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்தால் ரத்து
அதற்குள் ஐந்தாண்டுகள் கடந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் உட்பட எந்தத் தொகுதியிலும் தி.மு.க., ஜெயிக்கவில்லை. இந்த கால இடைவெளியில் நிலம் கையகப்படுத்துவதற்கான மதிப்பு, ரூ.610 கோடியாக எகிறியது. தோற்றுப்போன ஒரு மாவட்டத்தில், எதற்காக இவ்வளவு தொகை செலவிட வேண்டுமென்று நினைத்த அரசு, மேட்டுப்பாளையம் பை பாஸ் திட்டத்தையே ரத்து செய்தது.
எட்டாண்டு உழைப்பை, பணத்தை விரயமாக்கி, திட்டத்தை மீண்டும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்குத் தள்ளிவிட்டது.
மத்திய அரசும் அதைப் பரிசீலித்து, ஐந்து கி.மீ., துாரத்துக்கு புதிய பை-பாஸ் (கி.மீ.,377/10-38210) அமைக்கவும், மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே, மற்றொரு பாலம் கட்டவும் ஒப்புதல் அளித்தது.
மூன்று பாலங்கள்
அத்துடன் சேர்த்து, கோவை, சுந்தராபுரம் சந்திப்பு, 'எல் அண்ட் டி' பை பாஸ் சுங்கம் சந்திப்பு-பாப்பம்பட்டி பிரிவு வரை, சத்தி ரோட்டில் டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து 2.4 கி.மீ.,துாரம் வரை என மேலும் 3 பாலங்கள் கட்டவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 2022 துவக்கத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி, நிதியும் ஒதுக்கியது.
அதன்பின்னும் ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது. ஆணையம் சார்பில், இந்த பணிகளை மேற்கொள்ளும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, இப்போது மீண்டும் திட்டத்தை மாற்றியுள்ளது. மேட்டுப்பாளையம் நகருடன், காரமடைக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த பை பாஸ் ஆக அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிதாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.
மூன்று பணிகள்
இதுகுறித்து, தமிழக அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளரிடமிருந்து, மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் சென்னை மண்டல அலுவலருக்கு, கடந்த 14ல் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், பை பாஸ் உடன், பவானி ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு பாலம், சுந்தராபுரம் பாலம் ஆகிய மூன்று பணிகளுக்கும், ஒரே கன்சல்டன்ஸி நியமிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
திட்ட அறிக்கைக்கு இனி டெண்டர் விட்டு, ஆறு மாதங்கள் கழித்து, அதை வாங்கி, மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கி, நிலமெடுத்து, டெண்டர் விட்டு, பை பாஸ் அமைப்பதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும்.
அடுத்த அரசு, இத்திட்டத்தை அப்படியே தொடருமா அல்லது வேறு முடிவு எடுக்குமா என்பது தெரியாது. ஆக, கண்ணுக்கெட்டிய துாரம் வரை, மேட்டுப்பாளையம் பை பாஸ் கானல் நீராகத்தான் தெரிகிறது.
-நமது சிறப்பு நிருபர்-