/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றில் படர்ந்த ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம் கழிவுநீர் கலப்பதற்கு தீர்வு அவசியம்
/
ஆற்றில் படர்ந்த ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம் கழிவுநீர் கலப்பதற்கு தீர்வு அவசியம்
ஆற்றில் படர்ந்த ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம் கழிவுநீர் கலப்பதற்கு தீர்வு அவசியம்
ஆற்றில் படர்ந்த ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம் கழிவுநீர் கலப்பதற்கு தீர்வு அவசியம்
ADDED : மே 19, 2024 11:07 PM

ஆனைமலை:ஆனைமலை அருகே, ஆழியாறு ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை, பேரூராட்சிகள் இணைந்து அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது.
ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி நகராட்சி, வழியோர கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்ளிட்ட 64 கிராமங்கள், பெரிய நெகமம், கிணத்துக்கடவு பேரூராட்சி பயன்பெறும் வகையில், 13 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்துார் உள்ளிட்ட பகுதி மக்கள் குடிக்க குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
பல லட்சம் மக்கள் பயன்படுத்தி வருவது இந்த ஆற்று நீரையேயாகும். மக்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கு நீராதாரமாக உள்ளது இந்த ஆழியாறு ஆறு.
குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆறு பல்வேறு காரணங்களினால், கலங்கி வருவதுடன், மாசுபடுகிறது. இதனால், ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டுமென, ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் பேரூராட்சிகள் சார்பில், ஆகாயத்தாமரை அகற்ற திட்டமிட்டனர்.
கடந்த வாரம் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்து, ஆகாயத்தாமரை அகற்றுவது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள், பேரூராட்சியுடன் பேசினார்.
நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகாயத்தாமரையை அகற்ற, நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள், 'ஆழியாறு மேற்பகுதியில் உள்ள கழிவு, வண்டல் மண் எடுக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆழியாறு கரைப்பகுதியில் உள்ள மண் எடுக்க அனுமதியில்லை. கரைப்பகுதியிலோ, ஆறு உட்பகுதியிலோ ஆழப்படுத்த அனுமதியில்லை.
ஆழியாறு அணைப்பகுதியில் கழிவு மண்ணை தவிர, மணல் எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆழியாறு ஆற்றில் நிரந்தர கட்டுமானம் உள்ள பகுதியில் மண் எடுக்க தடை செய்யப்படுகிறது.
வண்டல் மண் எடுத்த பகுதியில் மண் அரிப்பு ஏற்படும் சூழலில் அதை பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக சரி செய்து கொடுக்கப்பட வேண்டும். பொதுமக்களின் குடிநீருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படா வகையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
இதையடுத்து, பணிகள் நேற்றுமுன்தினம் துவங்கப்பட்டன. பேரூராட்சி தலைவர்கள் கலைச்செல்வி, ஸ்ரீதேவி, ஆனைமலை பேரூராட்சி துணைத்தலைவர் ஜாபர் அலி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு தேவை!
ஆனைமலை அருகே உள்ள, ஆழியாறு ஆற்றில் ஒன்பது இடங்களில் இருந்து நேரடியாக கழிவு நீர் கலந்து தண்ணீர் முழுமையாக மாசுபட்டுள்ளது.
மேலும், நீரில் கழிவுகளையும் வீசுவதால், ஆழியாறு நீரின் சுவை தற்போது கிடைப்பதில்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை தான் நீடிக்கிறது.
தற்போது, ஆகாயத்தாமரை அகற்றுவதோடு நிறுத்தாமல், பேரூராட்சி நிர்வாகம் என அரசுத்துறைகள் இணைந்து கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கும் தீர்வு கண்டால் பயனாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை பேரூராட்சி தலைவர் கூறுகையில், ''ஆனைமலை ஆற்றில், மூன்று கி.மீ., துாரத்துக்கு ஆகாயத்தாமரை அகற்றும் பணி நடக்கிறது. தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

