/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைவாசிக்கு கேரளாவில் இழப்பீடு! ரயில்வே அதிகாரிகள் மீதான புகாரில் நுகர்வோர் கோர்ட் உத்தரவு
/
கோவைவாசிக்கு கேரளாவில் இழப்பீடு! ரயில்வே அதிகாரிகள் மீதான புகாரில் நுகர்வோர் கோர்ட் உத்தரவு
கோவைவாசிக்கு கேரளாவில் இழப்பீடு! ரயில்வே அதிகாரிகள் மீதான புகாரில் நுகர்வோர் கோர்ட் உத்தரவு
கோவைவாசிக்கு கேரளாவில் இழப்பீடு! ரயில்வே அதிகாரிகள் மீதான புகாரில் நுகர்வோர் கோர்ட் உத்தரவு
ADDED : மே 29, 2024 12:40 AM
-நமது நிருபர்-
கோவையைச் சேர்ந்தவர், கேரளா சென்றபோது ரயில் தாமதத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.15 ஆயிரம் வழங்க, கேரளா நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் சிஜூ ஆபிரஹாம். தெற்கு ரயில்வேயில், மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தவர். இவர் கடந்த 2022 மார்ச் 6ம் தேதியன்று, தொழில் நிமித்தமாக கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்துள்ள, திருவல்லாவுக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார். இடையில், ஏற்றுமானுார் என்ற ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்றுள்ளது.
வழக்கமாக, ஒரு நிமிடம் மட்டுமே நிற்க வேண்டிய அந்த ரயில்வே ஸ்டேஷனில், அன்று 20 நிமிடங்களாகியும் புறப்படவில்லை.
இதுபற்றி ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டபோது, காரணம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். அதன்பின், கோட்ட அதிகாரிகளுக்கு போன் செய்து, இதுபற்றி சிஜூ புகார் கூறியுள்ளார்.
அதற்கு, அப்போதிருந்த முதுநிலை கோட்ட மேலாளர் (இயக்கம்) செல்வின் என்பவர், அங்கு இவ்வளவு நேரம் நிறுத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை என்று கூறி, தாமதத்துக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்; இதுபற்றி விசாரிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். ஆனால் அதன்பின்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக ரயில் புறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, திருவல்லா ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலை 3:35 மணிக்குச் செல்ல வேண்டிய ரயில், மாலை 5:00 மணிக்கு மேல் சென்றடைந்துள்ளது.
ரயில் தாமதத்தால், சிஜூ ஆபிரஹாம், அவரது தொழில் சார்ந்து பங்கேற்க வேண்டிய, முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க இயலாமல் போய் விட்டது.
இதுபற்றி கோட்ட அலுவலகத்தில் அவர் புகார் தெரிவித்தபோது, விசாரணை நடத்தப்பட்டது. தேவையற்ற தாமதத்துக்கு, திருவனந்தபுரம் கோட்ட தலைமை நேரக்கட்டுப்பாட்டு அலுவலர் பிரதீப் நாயர், பிரிவு கட்டுப்பாட்டு அலுவலர் சச்சின் வர்கீஸ் இருவருமே காரணமென்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, கோட்ட முதுநிலை கோட்ட மேலாளர் மாற்றப்பட்டார்.
புதிய முதுநிலை கோட்ட மேலாளர் (இயக்கம்) ஆக, பிஜூவின் என்பவர் பொறுப்பேற்றார். அவர் வந்த பின்பு, அவர்கள் இருவர் மீதும் பெயரளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, ஆபிரஹாம் கேட்டபோது, 'உங்கள் புகாருக்காக நாங்கள் அவர்களை பணியிலிருந்தா நீக்க முடியும்' என்று மிகவும் உதாசினப்படுத்தி, முதுநிலை கோட்ட மேலாளர் பேசியுள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த சிஜூ ஆபிரஹாம், மலப்புரம் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நுகர்வோர் கோர்ட், ரயில் தாமதத்தால் சிஜூ ஆபிரஹாமுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரத்தை, சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, அவசியமின்றி ரயிலை தாமதப்படுத்தும் ரயில்வே அதிகாரிகளுக்குப் பாடமாக இருக்குமென்று, சிஜூ தெரிவித்தார்.