/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் விமான இன்ஜின் தயாரிக்க பரிசீலியுங்கள்! மத்திய எம்.எஸ்.எம்.இ., துறை செயலரிடம் முறையீடு
/
கோவையில் விமான இன்ஜின் தயாரிக்க பரிசீலியுங்கள்! மத்திய எம்.எஸ்.எம்.இ., துறை செயலரிடம் முறையீடு
கோவையில் விமான இன்ஜின் தயாரிக்க பரிசீலியுங்கள்! மத்திய எம்.எஸ்.எம்.இ., துறை செயலரிடம் முறையீடு
கோவையில் விமான இன்ஜின் தயாரிக்க பரிசீலியுங்கள்! மத்திய எம்.எஸ்.எம்.இ., துறை செயலரிடம் முறையீடு
ADDED : ஜூலை 11, 2024 06:17 AM

கோவை : கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில், அமைத்துள்ள ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் மையத்தை, மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை (எம்.எஸ்.எம்.இ.,) செயலர் தாஸ் மற்றும் உயரதிகாரிகள், நேரில் ஆய்வு செய்தனர். பின், 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், தொழில்துறை சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள், மத்திய - மாநில அரசுகள் செய்ய வேண்டிய சலுகைகள், உதவிகள், தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. 'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள், எதிர்பார்க்கப்படும் கோரிக்கைகள் குறித்து, மனு கொடுத்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எம்.எஸ்.எம்.இ.,) முன்னுரிமை பிரிவாக கருத வேண்டும். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைகளுக்கு, 25 சதவீத கட்டாய கொள்முதலை ஒழுங்குபடுத்த, மத்திய அரசு குழு அமைக்க உள்ளது; இதை, 40 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
விமான இன்ஜின்கள் தயாரிப்பு
தேவையான திறன்களுடன் மனித வளம் உருவாக்க, நாடு முழுவதும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டை கொண்டு வருவதற்கு, கோவையில் விமான இன்ஜின்கள் தயாரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது, தமிழத்தில் உள்ள அனைத்து எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
இயந்திரங்கள் வாங்க குறைந்த வட்டியில், வங்கி கடன் வழங்க வேண்டும். நிறுவன விரிவாக்கம், நவீனமயமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மூலதன மானியம் தர வேண்டும்.
சென்னை, கோவை, சேலம், திருச்சி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து, உதிரிபாகங்கள் மற்றும் பிற சேவைகளை அதிகளவில் பெறுவதை ஊக்குவிக்க, தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடத்தை மேம்படுத்த வேண்டும்.
எம்.ஆர்.பி.,விலை நிர்ணயிக்கணும்
மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்கும் வகையில், வலுவான கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு உதவும் வகையில், உள்நாட்டு விநியோகம் மற்றும் விலைகள் சீராகும் வரை, அனைத்து மூலப்பொருட்களின் ஏற்றுமதியையும் நிறுத்த வேண்டும். இந்திய உற்பத்தியாளர்களுக்கு, தரமான எகு மற்றும் பிற மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மூலப்பொருட்களுக்கு, அரசே எம்.ஆர்.பி., விலை நிர்ணயிக்க வேண்டும்.
அனைத்து மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும். மூலப்பொருட்களுக்கு பதிலாக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தால், நமது நாட்டின் பொருளாதாரம் உயரும்.
மூலப்பொருட்களை ஆய்வு செய்ய, மாநில அரசு குழு அமைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் ஆர்டர்களை ஓரிரு ஆண்டுகளுக்கு ஏற்பதால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது. 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.