/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
/
தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
ADDED : ஆக 01, 2024 12:47 AM

வால்பாறை : வால்பாறையில், தொடர்ந்து பெய்யும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில், தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேல்நீராறு, கீழ்நீராறு, இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சி, கூழாங்கல்ஆறு, பிர்லா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வாழைத்தோட்டம், டோபிகாலனி ஆற்றோரப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
தொடர் கனமழையால், ரோட்டில் மரம், மண் சரிந்து போக்குவரத்து பாதித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் வருகை குறைந்துள்ளது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 163.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 9,241 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், 9,816 கனஅடி நீர் வெளியேற்றமாக இருந்தது.
பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 58.10 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில், பரம்பிக்குளத்தில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 10,377 கனஅடியாக இருந்தது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
வால்பாறை - 62, சோலையாறு - 57, பரம்பிக்குளம் - 50, ஆழியாறு - 14, மேல்நீராறு - 75, கீழ்நிராறு - 72, காடம்பாறை - 8, மேல்ஆழியாறு - 3, சர்க்கார்பதி - 20, வேட்டைக்காரன்புதுார் - 12, மணக்கடவு - 14, துணக்கடவு - 31, பெருவாரிப்பள்ளம் - 25, பொள்ளாச்சி - 10 என்ற அளவில் மழை பெய்தது.