/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருத்தி விளைச்சலை அதிகரிக்க வாய்ப்பு காட்டன் பெடரேஷன் கோரிக்கை
/
பருத்தி விளைச்சலை அதிகரிக்க வாய்ப்பு காட்டன் பெடரேஷன் கோரிக்கை
பருத்தி விளைச்சலை அதிகரிக்க வாய்ப்பு காட்டன் பெடரேஷன் கோரிக்கை
பருத்தி விளைச்சலை அதிகரிக்க வாய்ப்பு காட்டன் பெடரேஷன் கோரிக்கை
ADDED : ஆக 09, 2024 02:04 AM

கோவை:''நமது நாட்டில் பருத்தி விளைச்சலை, 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்குரிய நடவடிக்கைகளை அரசு தரப்பில் இப்போதே எடுக்க வேண்டும்,'' என, இந்தியன் காட்டன் பெடரேஷன் தலைவர் துளசிதரன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவில் பருத்தி விலை அதிகமாக இருக்கிறது. சர்வதேச அளவில் விலை வித்தியாசம் இருப்பதால், ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய விவசாயிகளை பாதுகாக்கவே, பருத்தி இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட்டது. ஏப்., இறுதிக்குள் விவசாயிகள் பருத்தியை விற்று விடுகின்றனர்.
அவை கிராம அளவிலான வியாபாரிகள் மற்றும் ஜின்னிங் பேக்டரியில் இருக்கின்றன. மே - செப்., வரையிலான காலத்துக்கு வரி விலக்கு அளித்தால் போதும்.
இந்தியாவில் பருத்தி விளைச்சல், ஏக்கருக்கு மிக குறைவாக இருக்கிறது. உலகளவில் பருத்தி விளைச்சல் குறைவாக இருக்கும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. பருத்தி விளைச்சலை, 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆண்டுக்கு, 325 லட்சம் பேல் பருத்தி விளைவிக்கப்படுகிறது; 2030ல், நமக்கு 500 லட்சம் பேல் பருத்தி தேவை.
அத்தேவையை பூர்த்தி செய்ய, இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ப விளைவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கதேசத்தால் வாய்ப்பு
நம்மிடம் திறமையான விஞ்ஞானிகள் இருக்கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன. போதுமான நிதி மற்றும் அறிவுறுத்தல் வழங்கினால், மூன்று ஆண்டுகளில் பருத்தி விளைச்சலில் தன்னிறைவை எட்டலாம்.
வங்கதேசத்தில் ஜவுளித்துறை மூலமாகவே, 86 சதவீத அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது. யார் ஆட்சி அமைத்தாலும், இத்துறையை ஊக்குவித்து பாதுகாக்கவே நடவடிக்கை எடுப்பர். ஜவுளி ஏற்றுமதி அங்கு பாதிப்பு இருக்கலாம்; உற்பத்திக்கு தடங்கல் இருக்காது.
சீக்கிரமாகவே நார்மலுக்கு கொண்டு வருவார்கள். இதுபோன்ற பிரச்னை எதிர்காலத்திலும் வந்தால் என்ன செய்வதென நினைத்து, இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளுக்கு 'பையர்ஸ்' ஆர்டர்களை பிரித்து வழங்குவர்.
அதில், இந்தியாவுக்கு ஜவுளி ஆர்டர் வரும். வங்கதேசத்துக்கு நுால் ஏற்றுமதி அதிகமாக இருந்தது. இந்நிலை நீடித்தால், அதற்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
விளைச்சலை பெருக்கணும்
செயற்கை பருத்தி விலை, சர்வதேச விலையை விட அதிகமாக இருக்கிறது. செயற்கை பருத்தியில் உற்பத்தியாகும் ஜவுளியில், 95 சதவீதம் உள்நாட்டு சந்தைக்கு செல்கிறது; ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.
பருத்தி துறையில் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புகள் இருக்கின்றன. விவசாயிகள் பருத்தி விளைவிக்க செலவு அதிகமாகிறது; விளைச்சலை அதிகரிக்க அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
தமிழக அளவில் ஆண்டுக்கு, 100 லட்சம் பேல்களை விட அதிகமாகவே தேவை. ஆனால், 6 -7 லட்சம் பேல்களே விளைவிக்கப்படுகின்றன.
அரசு முயற்சிக்க வேண்டும்
பருத்தி உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க முடியும். பவானிசாகர், விழுப்புரம், பண்ருட்டி போன்ற பகுதிகளில் அறுவடை முடிந்ததும் பருத்தி விளைவிப்பர்; இப்போது, அதை குறைத்துவிட்டனர்.
சேலம், ஆத்துார், கொங்கனாபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, கோவில்பட்டி, வாசுதேவநல்லுார், திருநெல்வேலி, பழனி, ஒட்டன் சத்திரம்,அருப்புக்கோட்டை, தேனி, கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி விளைவிக்கப்படுகிறது. தமிழக அரசு முயற்சித்தால், பருத்தி விளைச்சலை அதிகரிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.