ADDED : ஜூலை 28, 2026 04:41 PM
அதிகரிக்கும் சைபர் குற்றங்களை... 11 போலீசார்தான் இருக்கின்றனர்
கோவை: மாநகரில் சைபர் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டிய இப்பிரிவில் வெறும் 11 போலீசார்தான் இருக்கின்றனர். இதனால் கைது, விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
சைபர் குற்றங்களை விரைந்து கையாள, நாடு முழுவதும் இ-–எப்.ஐ.ஆர். பதிவு நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, தேசிய சைபர் குற்ற புகார் இணையதளம் மற்றும் 1930 உதவி எண்ணில் பதிவாகும் அனைத்து புகார்களுக்கும், இ-–எப்.ஐ.ஆர். போட்டு உடனடியாக விசாரணை தொடங்கப்படுகிறது.
கோவை மாநகரில் மட்டும் கடந்த ஏழு மாதங்களில் 6,000 புகார்கள் பதிவாகியுள்ளன. ஆன்லைன் வங்கி மோசடி, முதலீட்டு மோசடி, போலி வேலைவாய்ப்பு, டிஜிட்டல் கைது, சமூக வலைதள மோசடி உள்ளிட்ட பல்வேறு நிதி மோசடிகளில் சிக்கி ஏராளமானோர் பணத்தை இழந்து வருகின்றனர்.
ஆனால், இந்த வழக்குகளை கையாள மாநகர சைபர் கிரைம் பிரிவில், இன்ஸ்பெக்டர் உட்பட மொத்தம் 11 போலீசார் மட்டுமே உள்ளனர்.
ஆயிரக்கணக்கான புகார்கள், இ-எப்.ஐ.ஆர். பதிவு, ஆரம்பகட்ட விசாரணை, வங்கி கணக்குகள் முடக்கம், தொழில்நுட்ப ஆதாரங்கள் சேகரிப்பு, நீதிமன்ற பணிகள், வீடியோ கான்பிரன்ஸ் விசாரணை ...இப்படி எக்கச்சக்க பணிகள் உள்ளதால், பணியாளர் பற்றாக்குறையால் வேகமாக விசாரணையை நடத்த முடிவதில்லை.
சைபர் குற்றங்களில் முதல் சில மணி நேரங்களில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பறி போன பணத்தை மீட்கும் வாய்ப்பு அதிகம்.
எனவே, இந்த பிரிவில் கூடுதல் போலீசாரை நியமித்து, நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தனி சைபர் பாதுகாப்பு ஆய்வகம் அமைக்க கோரிக்கை வலுத்துள்ளது.
‘தனி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன்’ சைபர் கிரைம் புகார்கள் அதிகரித்து வருவது உண்மைதான். இந்த பிரிவுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க, அரசிடம் கேட்டுள்ளோம். கோவையில் 80 போலீசார் கொண்ட தனி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் அமைப்பதற்கான கருத்துருவும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. – கண்ணன் போலீஸ் கமிஷனர்
