/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகரமைப்பு குழுவினர் ஒப்புதல் இல்லாமல் 102 லே-அவுட்களுக்கு மன்றத்தில் அனுமதி நகரமைப்பு கவுன்சில் குழுவினர் கொந்தளிப்பு
/
நகரமைப்பு குழுவினர் ஒப்புதல் இல்லாமல் 102 லே-அவுட்களுக்கு மன்றத்தில் அனுமதி நகரமைப்பு கவுன்சில் குழுவினர் கொந்தளிப்பு
நகரமைப்பு குழுவினர் ஒப்புதல் இல்லாமல் 102 லே-அவுட்களுக்கு மன்றத்தில் அனுமதி நகரமைப்பு கவுன்சில் குழுவினர் கொந்தளிப்பு
நகரமைப்பு குழுவினர் ஒப்புதல் இல்லாமல் 102 லே-அவுட்களுக்கு மன்றத்தில் அனுமதி நகரமைப்பு கவுன்சில் குழுவினர் கொந்தளிப்பு
ADDED : ஜூலை 30, 2024 10:49 PM
கோவை;கோவை மாநகராட்சியில், நகரமைப்பு குழு ஒப்புதல் பெறாமல், 102 லே-அவுட்டுகளுக்கு அனுமதி வழங்கி, அவசரகதியில் தீர்மானம் நிறைவேற்றியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர். மண்டல தலைவர்கள் தலைமையில் மாதந்தோறும் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு வார்டிலும் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி, மன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.
இதேபோல், பணிகள் குழு, பொது சுகாதாரக்குழு, நகரமைப்பு குழு, கல்விக்குழு, கணக்கு குழு, வரி விதிப்பு குழு, நியமன குழு செயல்படுகின்றன. ஒவ்வொரு நிலைக்குழுவுக்கும் தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கு தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரைத்த பிறகே மன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும். ஆனால், நிலைக்குழுக்களுக்கே தீர்மானங்களை அனுப்பாமல், நேரடியாக மன்றத்துக்கு கொண்டு வந்து, விவாதமே செய்யாமல், நிறைவேற்றுவது வாடிக்கையாகி விட்டது.
இதுதொடர்பாக, நகரமைப்பு மற்றும் அபிவிருத்திக் குழு தலைவர் சந்தோஷ் தலைமையில் குழு உறுப்பினர்களான, 14 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, முந்தைய மேயர் கல்பனா மற்றும் கமிஷனரிடம் ஏற்கனவே கடிதம் கொடுத்திருக்கின்றனர். அதையும் மீறி, துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் சமீபத்தில் நடந்த மாமன்ற கூட்டத்தில், 102 லே-அவுட்டுகளுக்கு அனுமதி வழங்கும் தீர்மானம் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதற்கு, நகரமைப்பு குழுவினர் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து, தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தினர். எவ்வித விவாதத்துக்கும் இடமளிக்காமல், 'ஆல் பாஸ்' முறையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, அதைப்பற்றி கருத்து சொல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை என கவுன்சிலர்கள் புலம்பினர்.
இதுகுறித்து, மாநகராட்சி நகரமைப்பு குழுவினர் கூறுகையில், 'லோக்சபா தேர்தலுக்கு முன், மாமன்ற கூட்டம், மார்ச் மாதம் நடந்தது. ஏப்., - மே, ஜூன் என மூன்று மாதங்கள் மட்டுமே கூட்டம் நடக்கவில்லை. லே-அவுட் அப்ரூவல் தொடர்பாக, 2021ம் ஆண்டில் இருந்து நிலுவையாக இருந்த கோப்புகளை, நகரமைப்பு குழுவுக்கு தெரியாமல், மாமன்ற கூட்டத்துக்கு நேரடியாக கொண்டு வந்தனர். ஆட்சேபித்தும் கூட, அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கமிஷனருக்கு மீண்டும் கடிதம் வழங்கப்படும். முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர், நகராட்சித்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் நகல் அனுப்ப இருக்கிறோம்' என்றனர்.