/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷா சார்பில் அமைத்த தகன மேடை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
/
ஈஷா சார்பில் அமைத்த தகன மேடை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஈஷா சார்பில் அமைத்த தகன மேடை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஈஷா சார்பில் அமைத்த தகன மேடை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 13, 2024 07:50 AM

சென்னை : கோவை மாவட்டம், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட மின்சார தகன மேடையை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு:
எங்கள் கிராமம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் வருகிறது. எங்களுக்கு சொந்தமான நிலத்தை, ஈஷா பவுண்டேஷனுக்கு விற்றோம். அதில், காலபைரவர் கோவிலை, ஈஷா அறக்கட்டளை கட்டியது. எங்கள் வீட்டின் அருகில் மின்சார தகன மேடையை கட்டினர். அதற்கு முன், பொது மக்களிடம் கருத்து கேட்கவில்லை. வெற்று தாளில் கிராமத்தினரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.
போளுவாம்பட்டி பள்ளத்தாக்கில், இக்கரை போளுவாம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. பிணங்களை அங்கு எரிக்கும்போது, நெடி வீசும். பழங்குடியினத்தைச் சேர்ந்த இருளர், மொடுகர் இன மக்கள், இங்கு வசிக்கின்றனர். பழங்குடியினர் எவரும் இறந்தால், புதைப்பது தான் வழக்கம்; எரிப்பது இல்லை.
காலபைரவர் தகன மண்டபம், பழங்குடியின மக்களுக்காக என ஈஷா அறக்கட்டளை கூறுவது பொய். ஏற்கனவே செம்மேடு கிராமத்தில், புதைப்பதற்கான இடம் உள்ளது. எனவே, இக்கரை போளுவாம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர், மின்சார தகன மேடை அமைக்க எப்படி ஒப்புதல் அளித்தார் என்பது குறித்து விசாரணை நடத்த, கோவை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். தகன மண்டபத்தை அகற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஈஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் 'தனது வசிப்பிடம் குறித்த முக்கிய தகவலை, மனுதாரர் மறைத்துள்ளார். தமிழக அரசு உடன் இணைந்து, 14 தகன மேடைகளை ஈஷா இயக்குகிறது. நெடி வீசாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன' என கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''பொது மக்களிடம் கருத்து கோராமல், தகன மேடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தகன மேடையை அகற்ற வேண்டும்,'' என்றார். ஈஷா தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''மின் தகன மேடை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதிக உயரத்தில் புகைபோக்கி அமைக்கப்பட்டுள்ளதால், பொது மக்களுக்கு பாதிப்பு இல்லை,'' என்றார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின், தகன மேடையை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும் 26ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

