ADDED : ஜூலை 26, 2026 09:03 PM
கஞ்சா, மாத்திரைகள் பறிமுதல்
ஆத்துப்பாலம்: கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி நேற்று முன்தினம் புட்டுவிக்கி சாலையில் ரோந்து சென்றார். அங்குள்ள ஷோபா கார்டன் அருகேயுள்ள காலியிடத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை விசாரித்தார். சுண்ணாம்பு காளவாய், பெரியசாமி வீதி, முஹமது அனாஸ், 24, குனியமுத்தூர், திருவள்ளுவர் நகர், முஹமது வாசிம், 21 என தெரிந்தது. அனாஸிடம் 100 கிராம் கஞ்சா, டெபண்டடால் மாத்திரை, 62, வாசிமிடம் 100 கிராம் கஞ்சா, டெபண்டடால் மாத்திரை, 51 இருந்தன. பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
பா.ஜ.நிர்வாகிக்கு கொலை மிரட்டல்
போத்தனூர்: போத்தனுார் அருகே நியூயார்க் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜோசப், 48; பா.ஜ. தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர். இவர் தனது நிலத்தின் பின்புற காம்பவுண்ட் சுவரை, 15 அடி இடித்து, புதிய பாதை அமைத்தார். நேற்று முன்தினம் இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜாபர் அலி, 64 அவரது மகன் ஷான், 40 ஆகியோர், ஜோசப் அமைக்கும் பாதை, தனியாருக்கு சொந்தமானது என கூறி, அவ்விடத்தில் இரும்பு தூண்கள் நட்டு, கான்கிரீட் தளத்துடன் கேட் அமைக்க முயன்றனர். ஜோசப் அவற்றை அகற்ற முயன்றபோது, ஷான் தடுத்தார். வாக்குவாதம் ஏற்பட்டது. ஜாபர் அலி, ஜோசப்பை கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஜோசப் புகாரில் போத்தனூர் போலீசார் விசாரித்து இருவரையும் கைது செய்தனர்.
