விபத்தில் இருவர் பலி
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில் வசிப்பவர் சிவகுமார், 24; டிரைவர். இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனூர் நோக்கி டிராக்டரை ஓட்டி சென்றார். நாயக்கன்பாளையம் போஸ்ட் ஆபீஸ் முன்பு வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஜெகநாதன், 39, அதே இடத்தில் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த கோபாலகிருஷ்ணன், 42, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்பனை : 3 பேர் கைது
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள கரட்டுமேடு பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து மூவரையும் போலீசார் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், 22, அபுதாஹீர், 27, காரமடையை சேர்ந்த அஜந்தன், 30, என தெரியவந்தது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார், அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
----கஞ்சா பறிமுதல்; மூவர் சிறையில் அடைப்பு
சூலூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க சூலூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதில், மூன்று நாட்களில் இரு இடங்களில், 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காங்கயம் பாளையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிரஞ்சன் ஹாசிம் மகன் முகமது ஷம்சாத்,39, மற்றும் மகேந்திர மகதோ மகன் ஜெய் நாராயணன் மகதோ, 39 ஆகியோரிடம் இருந்து, 1 கிலோ, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், அதே பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ ஹன்சா மகன் நமீஷ் ராஜ ஹன்சா,22 என்ற நபரிடம் இருந்து, 1 கிலோ, 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.