ஒருவர் குத்திக் கொலை 3 பேருக்கு வலை
கோவையை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் கோவையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படித்து முடித்த சுப்ரமணியம்பாளையத்தை சேர்ந்த மிதுன் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலமுருகன் மகள் கடந்த சனிக்கிழமை மதியம் முதல் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலமுருகன், தனது சகோதரர் மணிகண்டன்,39, நண்பர் செல்வம் ஆகியோருடன் வாடகை காரில் தனது மகளைத் தேடினார்.
அப்போது, சுப்பிரமணியம் பாளையத்தை அடுத்துள்ள கே.என்.ஜி., புதூரில் சாலை ஓரமாக மிதுன்,20, மற்றும் அவரது நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த பாலமுருகன் தரப்பினர், மிதுனிடம் மகள் குறித்து கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த மிதுன், பாலமுருகனின் சகோதரர் மணிகண்டனை கத்தியால் குத்தினார். அதை தடுக்க வந்த வாடகை கார் டிரைவர் செல்வ கணபதியையும் குத்தினார். காயம் அடைந்த மணிகண்டன், செல்வகணபதி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மிதுன் உட்பட மூன்று பேரை தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து நகை திருட்டு
சூலுார் அடுத்த பாப்பம்பட்டி - இடையர் பாளையம் ரோடு, கள்ளிமேடு தோட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன், 63, ஓட்டல் உரிமையாளர். தனது மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த, 19 தேதி தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார். அங்கிருந்து கடைக்கு சென்றுவிட்டார்.
20ம்தேதி மாலை, 6:00 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, தங்க வளையல்கள், செயின்கள், கம்மல்கள் என, மொத்தம், 18 சவரன் நகை திருடப்பட்டிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து அவர் சூலுார் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் தடயங்களை சேகரித்தனர். அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீடு புகுந்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
நகை திருட்டு; போலீசார் விசாரணை
கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் அருகே உள்ள கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி, 45, நல்லாம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி அங்கன்வாடி ஆசிரியர். இவருக்கும், மனோபிரியா இடையே கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்தது.
சம்பவத்தன்று மனோபிரியா, நல்லாம்பாளையத்தில் இருந்த புவனேஸ்வரியை மிரட்டி, அவரிடம் இருந்த முக்கால் பவுன் தங்கச் செயின், இரண்டு கம்மல், இரண்டு மொபைல் போன் ஆகியவற்றை திருடி சென்றார். கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது
கண்ணம்பாளையம் பகுதியில் சூலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பேரூராட்சி அலுவலகம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவநாத் மாக்டு மகன் ஜிஜேந்திர குமார், 19, மற்றும் விராஞ்சி மாக்டு மகன் ராஜேஷ் குமார், 30 என்பது தெரிந்தது. அவர்களை சோதனை செய்ததில் ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நடந்து சென்றவர் லாரி மோதி பலி
விழுப்புரம் மாவட்டம் அரியலூரை சேர்ந்த லூர்து சாமி மகன் ராயப்பன், 35. இவர் நீலம்பூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று நீலம்பூர் அவிநாசி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார்.
அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனக்கூறினர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.