பிக் அப் வாகனத்தை திருடியவர் கைது
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் 2 வது பாலம் பகுதியை சேர்ந்தவர் ராமன், 20. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். ராமனுக்கு சொந்தமாக, பிக் அப் வாகனம் உள்ளது. அதை வைத்து அவர் வாடகைக்கு ஒட்டி வருகிறார்.
கடந்த 19ம் தேதி, ராமன் வாடகைக்கு சென்று விட்டு, இரவு சுமார் 11 மணியளவில் ஊட்டி ரோடு, கவின் கார்டன் அருகே உள்ள தனியார் ஹோட்டல் எதிரில் உள்ள காலியிடத்தில், தனது வாகனத்தை நிறுத்தினார். பின் வீட்டுக்கு சாப்பிட்ட சென்றார். நள்ளிரவு வந்து பார்த்தபோது, ராமன் நிறுத்தி வைத்திருந்த இடத்திலிருந்து, பிக் அப் வாகனத்தை காணவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தும், நண்பர்களிடம் விசாரித்தும் எவ்வித தகவலும் இல்லை.
இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ராமன், காணாமல் போன தனது வண்டியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, வாகனம் காணாமல் போன இடத்திற்கு அருகில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
போலீசார் விசாரணையில் வாகனத்தை திருடியது குனியமுத்தூரை சேர்ந்த சடகாதுல்லாக், 46 என தெரியவந்தது. நேற்று முன் தினம் அவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து பிக் அப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
--- மிரட்டி பணம் பறித்தவருக்கு வலை
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் மணிகண்டன், 25. தற்போது மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டர் மில் பிரிவில் வசிக்கிறார். தனியார் நிறுவன தொழிலாளி. இவருக்கு சமூக வலைதளம் வாயிலாக, ஐயப்பன், 20, அறிமுகமானார். இருவரும் மேட்டுப்பாளையம் ரோடு, அரசு ஐ.டி.ஐ., மைதானத்தில் சந்தித்தனர். அப்போது ஐயப்பன், மணிகண்டனை உடைந்த பீர் பாட்டிலால் குத்தி விடுவேன் என மிரட்டி, அவரிடமிருந்த, 5,300 ரூபாய் ரொக்கம், இருசக்கர வாகனம், மொபைல் போன் ஆகியவற்றை பறித்து சென்றார். துடியலூர் போலீசார் ஐயப்பனை தேடி வருகின்றனர்.
நகை திருடிய தம்பதி கைது
சூலூர் அடுத்துள்ள பாப்பம்பட்டி - இடையர் பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பார்த்திபன்,62. பைப் லைன் பதிக்கும் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த, 20 ம்தேதி கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த, 18 சவரன் நகை திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். நேற்று குற்றவாளிகளான ஒண்டிப்புதூரை சேர்ந்த பிரகாஷ், 33, அவரது மனைவி தேவி,31 ஆகியோரை கைது செய்து, 18 சவரன் நகை மற்றும் ஒரு செல்போனை மீட்டனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.