பூட்டு உடைத்து நகை திருட்டு
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன், 60; கார்பெண்டர். மனைவி பத்மா, 55. இவர்களுக்கு விவேக்,35, வெங்கடேஷ்,29, மகன்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினர். வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ஐந்து பவுன் எடையுள்ள நகைகளும், ரொக்கம், 10 ஆயிரம் ரூபாயும் காணாமல் போய் இருந்தது. இது குறித்து, மாரியப்பன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது
அன்னூர் அருகே பூலுவபாளையத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ், 28. டிரைவர். இவர் 17 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் போக்சோ பிரிவில், வழக்கு பதிவு செய்து, சஞ்சீவை கைது செய்தனர். கோவை போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இரு வேறு விபத்துகளில் இருவர் பலி
செம்மாணி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 60. பஞ்சர் கடை உரிமையாளர்.இவர் நேற்று முன் தினம் மாலை கணேசபுரத்தில் மொபட்டில் ரோடு கிராஸ் செய்யும் போது வேகமாக வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.
* கானூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 23. இவர் நேற்று முன்தினம் மாலை சத்தி ரோட்டில் மேட்டுப்பாளையத்தில் பைக்கில் சென்ற போது, முருகேசன் என்பவர் ஒட்டி வந்த பைக் திடீரென குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளாகி இறந்தார். இதில் அவருடன் பயணித்த நடராஜர் என்பவர் படுகாயம் அடைந்தார்.
இரு விபத்துக்கள் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தண்ணீர் தொட்டியில் விழுந்து மூதாட்டி பலி
கருமத்தம்பட்டி அடுத்த கொள்ளுப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மனைவி செண்பகவள்ளி, 69, இவர், நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை, அவரது மகன் எழுந்து பார்க்கையில், தாயை காணவில்லை.
வீட்டின் வெளியில் சென்று பார்த்தபோது, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தாய் விழுந்து, இறந்து கிடப்பதை பார்த்து, அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

