டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த மூவர் கைது
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவி, 49. இவர் கைக்கோள பாளையத்தில் தங்கி, அங்குள்ள டாஸ்மாக் கடையில் பார் விற்பனையாளராக உள்ளார். கோவில்பாளையம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த தனுஷ், 20. ராம் கிருபா, 19. மகேஸ்வரன், 20. ஆகிய மூவரும் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். ரவியிடம், எங்களது நண்பர் ரவீந்திரன் மற்றும் நந்தகுமார் இருவரும் ஜெயிலில் உள்ளனர். அவர்களை ஜாமினில் எடுக்க 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பார் நடத்த விட மாட்டோம் என மிரட்டி உள்ளனர்.
பணம் தர மறுத்ததால் பார் ஊழியர் ரவியை தாக்கி, அவரிடம் இருந்து 1,200 ரூபாயை பறித்துக் கொண்டு மிரட்டல் விடுத்து சென்றனர். கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
மதுபோதையில் தகராறு:3 பேர் கைது
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் ஆத்துப்பாலம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அருகே வினோபாஜி பகுதியை சேர்ந்த கார்த்திக், 25, என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு வந்த நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், 40, தினகரன், 26, ராஜா, 28, உள்ளிட்டோர் அங்கு மது அருந்திவிட்டு, பெட்டிக்கடைக்கு சென்று சிகரெட் கடன் கேட்டனர்.
கார்த்திக் சிகரெட் கடன் தரமறுக்கவே, அவரை இவர்கள் மூன்றுபேரும், தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் ரகளையில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தகராறில் ஈடுபட்ட 3 பேரை, கார்த்திக் அளித்த புகாரின் பேரில் கைது செய்தனர்.
போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்யும் போது, போலீசாரையும் தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.----

