தீப்பிடித்த லாரி ஓட்டுனர் உயிர் தப்பினர்
கடலூர் மாவட்டம் ஆலத்தூரில் இருந்து, சிமென்ட் மூட்டை ஏற்றிக்கொண்டு நேற்று முன் தினம் லாரி ஒன்று, மேட்டுப்பாளையம் வந்தது. சிமென்ட் மூட்டைகளை, குடோனில் இறக்கிவிட்டு, லாரி மீண்டும் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், இந்தியன் வங்கி அருகே சென்றுக் கொண்டிருக்கையில், திடீரென லாரியின் முன்பக்கத்தில் தீ பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் முனியசாமி, லாரியை நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் லாரியின் முன்பக்கம் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
---மோட்டார் சைக்கிள் திருட்டு
கோவை கே.கே. புதூர், அண்ணா நகரை சேர்ந்தவர் கதிரேஷ்,22. இவர் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தியேட்டர் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தியேட்டருக்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அதை காணவில்லை. இது குறித்து, கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
யானை தாக்கி வாக்கிங் சென்றவர் காயம்
கோவை வனச்சரகம், தடாகம் பிரிவு தெற்கு சுற்றுக்கு உட்பட்ட காளையனூரில் வசிப்பவர் கணேஷ், 61. இவர் நேற்று காலை, 5.30 மணிக்கு அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, எதிரே வந்த காட்டு யானை தள்ளியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து இடது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவை வனத் துறையினர் மற்றும் தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.