ADDED : ஜூன் 09, 2024 12:37 AM

கோவை:குளக்கரையில் முறிந்து விழும் நிலையில், இருந்த பனைமரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
கோவை, உக்கடம் பெரியகுளத்தின் தெற்கு பகுதியில், கரும்புக்கடை முத்துகாலனியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. கடந்த, 1ம் தேதி குளக்கரையில் இருந்த பனைமரம் ஒன்று வேர்கள் வலுவிழந்ததால், முறிந்து விழுந்தது.
இதில், கடை மற்றும் வீடு சேதமடைந்தது. இதையடுத்து, அப்பகுதியினர் பனை மரம் முறிந்து குடியிருப்பின் மீது விழுவதாகவும், இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரித்து, அறிக்கை அளிக்க தெற்கு தாசில்தார் சரவணகுமார் உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பனைமரங்களை அகற்ற அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று 24 பனை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதற்கு பதிலாக மனுதாரர், அப்பகுதியில், 100 பனை மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரிக்கவும் அவர் உத்தரவிட்டார்.