/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடுகள் சேதம்; ஓட்டுநர்கள் அவதி
/
ரோடுகள் சேதம்; ஓட்டுநர்கள் அவதி
ADDED : மே 16, 2024 06:19 AM

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவில் பல இடங்களில் ரோடு சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட, கிராம ஊராட்சியில் உள்ள ரோடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சில கிராமங்களில் முறையான பஸ் வசதியும் இல்லை. இதனால், நீண்ட தூரம் பொதுமக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோடையில் தற்போது மழை பெய்து வருவதால் கிராமப்புற ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த இடத்தில் தண்ணீர் தேங்கி, சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சேதம் அடைந்த ரோட்டில், புதிதாக வரும் நபர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், சில ரோடுகளில் கனரக, டிப்பர் லாரியில், அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதல் அளவு கற்கள் மற்றும் கிராவல் மண் போன்றவை எடுத்து செல்வதால், கிராமப்புற ரோடுகள், இரண்டு ஆண்டுகளிலேயே சேதம் அடைய துவங்கி விடுகிறது.
மேலும், இங்கு புதிதாக ரோடு பணிகள் நடந்தாலும், மீண்டும் இரண்டே ஆண்டுகள் தான் தாக்குப்பிடிக்கும். டிப்பர்லாரிகள் அதிகம் செல்வதால், ரோடு விரைவில் சீர்குலைந்து விடுகின்றன.
சேதம் அடைந்த கிராமப்புற ரோடுகளில், பல இடங்களில் மின் விளக்கு வசதியும் இல்லை. எனவே, கிராமப்புற ரோட்டிற்கு முக்கியத்துவம் அளித்து விரைவாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிப்பர் லாரி போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.